இசி: பிஎஸ்சியின் எல்லாப் பரிந்துரைகளும் ஏற்கப்படும் என்பதற்கில்லை

தேர்தல் சீரமைப்புத் தொடர்பில் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை(பிஎஸ்சி) அமைப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வரும் வேளையில் அக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லவியலாது எனத் தேர்தல் ஆணையம்(இசி) தெரிவித்துள்ளது.

ஆணையம், முதலில் அப்பரிந்துரைகள்  நடைமுறைக்கு உகந்தவையா, செயல் சாத்தியமானவையா என்பதை ஆராயும் என்று இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் கூறினார்.

சீனமொழி நாளேடான சின் சியு டெய்லிக்கு அளித்த நேர்காணலில் அவர், இசி ஒரு சுயேச்சை அமைப்பு என்றும் அது அரசுத்துறைகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல என்றும் கூறினார்.

நாட்டில் தேர்தல்களை நடத்தி வருவது இசி மட்டுமே.தேர்தல் விவகாரங்களில் அது ஒன்றே நிபுணத்துவம் பெற்றது. எனவே, எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது அதற்கு மட்டுமே தெரியும் என்று வான் அஹ்மட் கூறினார்.

“பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதும் அவற்றில்  சில ஏன் செயல்படுத்த சாத்தியமற்றவை ஏன்பதை அக்குழுவுக்கு விளக்குவோம். அப்போது பிரச்னை என்னவென்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.”

பிஎஸ்சி பரிந்துரைகளை முன்வைத்தாலும் இசி அவற்றை நடைமுறை கோணத்திலிருந்தும் சட்ட ரீதியாகவும் ஆராயும்.

இவ்விவகாரத்தில் இசிக்கு உரிய  மதிப்பளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் தேர்தல் விவகாரங்களில் அதற்கு பரந்த அனுபவமும் நிபுணத்துவமும் உண்டு என்று வான் அஹ்மட் கூறினார்.

“நாங்கள் நடைமுறைப்படுத்த முடியுமா என்பதில் கவனம் செலுத்தி சிக்கல்களும் குழப்பங்களும் எழுவதைத் தவிர்க்கப் பார்ப்போம்.மற்றவர்கள் அவர்களின் சுய கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் சுய ஆதாயம் கருதியும் விசயங்களை அணுகுவார்கள்.”

என்றாலும், தேர்தல் சீரமைப்பு தவிர்க்க இயலாத ஒன்று என்பதை ஒப்புகொண்ட அவர், அதற்காக பிஎஸ்சி அமைக்கும் அரசாங்கத்தின் முடிவை வரவேற்றார்.

பிஎஸ்சி எதற்கு முன்னிரிமை கொடுக்க வேண்டும் என்று வான் அஹ்மட்டிடம் வினவியதற்கு பெர்சே 2.0 முன்வைத்த இரண்டு தடவை வாக்களித்தல், ‘ஆவி வாக்காளர்கள்’, அடையாள மை, கைரேகை பதிவுமுறை, அஞ்சல் வாக்குகள் போன்ற விவகாரங்களை முடிவு காண முதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

TAGS: