வரும் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்தவும் முன்கூட்டியே வாக்களிக்கவும் இசி இணக்கம்

பிஎஸ்சி தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளூமன்றத் தேர்வுக் குழு, அழியா மை மற்றும் முன் கூட்டியே வாக்களிப்பு ஆகியவை தொடர்பில் வழங்கிய பரிந்துரைகளை 13வது பொதுத் தேர்தலில் இசி என்ற தேர்தல் ஆணையம் அமலாக்கும்.

அந்தத் தகவலை இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் இன்று வெளியிட்டார்.

“அனைத்து இராணுவ வீரர்களும் அவர்களது மனைவியரும், போலீசார், பொது நடவடிக்கைப் படையினரின் துணைவியர் ஆகியோர் முன்கூட்டியே வாக்களிப்பதற்கு முடியும். அவர்கள் கடமையில் இருந்தால் அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கலாம்”, என பிஎஸ்சி-யின் இடைக்கால அறிக்கை சம்பந்தமாக நடத்திய நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

முன்கூட்டியே வாக்களிக்கின்றவர்களுக்கு நீண்ட காலம் இருக்கக் கூடிய அழியா மை வகை பயன்படுத்தப்படும் என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார்.

அந்த மை வகை இரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் சோதனை முடிவுகள் தேசிய பாத்வா மன்றத்துக்கும் சுகாதார அமைச்சுக்கும் சமர்பிக்கப்படும்.

“தேசிய பாத்வா மன்றம் அந்த மையை ஹராம் எனச் சொன்னால் நாங்கள் வேறு வட்டாரங்களிலிருந்து மையைப் பெறுவதற்கு முயலுவோம். ஆனால் எங்களுக்குத் தெரிந்த வரை அந்த மை பல நாடுகளில் முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றனர்.

டிசம்பர் முதல் தேதி பிஎஸ்சி நாடாளுமன்றத்தில் சமர்பித்த இடைக்கால அறிக்கைக்கு இணங்க அந்த இரண்டு மாற்றங்களும் செய்யப்படுகின்றன.

அழியா மையை அழிக்க முடியாது”

அந்த மைகள், 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு இறக்குமதியான மையிலிருந்து மாறுபட்டிருப்பதால் அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டியிருந்ததாக அப்துல் அஜிஸ் குறிப்பிட்டார்.

அந்த அழியா மை எங்கிருந்து பெறப்படுகிறது என்னும் தகவலைத் தர அவர் மறுத்து விட்டார்.

வாக்களிப்புக்கு முதல் நாள் வரையில் அந்த மை பற்றிய விவரங்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும்.

“அந்த அழியா மைகளில் சில்வர் நைட்டிரேட் கலந்துள்ளது. அது நகத்திலும் சருமத்திலும் சேர்ந்து விடும். அதனை அகற்ற முடியாது. சில்வர் நைட்டிரேட் அதிகமாக இருந்தால் கூடுதல் நாட்களுக்கு அது இருக்கும். முன்கூட்டியே வாக்களிக்கின்றவர்களுக்கு அது ஏழு விழுக்காடாகவும் வழக்கமான வாக்காளர்களுக்கு நான்கு விழுக்காடாகவும் அது இருக்கும்.”

“4 விழுக்காடு மூன்று நாட்கள் வரையிலும் 7 விழுக்காடு ஒரு வாரம் வரையிலும் அந்த மை தாங்கும்.”

“எல்லா வாக்காளர்களுக்கும் அழியா மை குறியிடப்படும். அந்த விஷயத்தை சட்டத் துறைத் தலைவர் தெளிவுபடுத்தி விட்டதால் அரசியலமைப்பு பிரச்னை எழுவதற்கு வழி இல்லை,” என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார்.

“அழியா மையைக் கொள்முதல் செய்வதற்கான அளிப்பாணையும் அந்த மையைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியையும் இசி வழங்கும். 1981ம் ஆண்டு தேர்தல் விதிகளில் 19வது விதிக்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.”

ஆனால் அதனை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என இசி தலைவர் குறிப்பிட்டார்.

“தேர்தல் முகவர்கள் வாக்குப் பெட்டிகளை காவல் புரியலாம்”

முன்கூட்டியே வாக்களிப்பது பற்றிக் குறிப்பிட்ட அப்துல் அஜிஸ், வாக்களிப்பு தினத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னதாக இராணுவ முகாம்களிலும் போலீஸ் தளங்களிலும் வாக்குச் சாவடிகளை அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

“இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்கூட்டியே வாக்களிப்பு நிகழும் என நாங்கள் நம்புகிறோம். எடுத்துக்காட்டுக்கு செத்தியாவாங்சா தொகுதியில் 10,000 இராணுவ வீரர்கள் உள்ளனர். எது எப்படி இருந்தாலும் உண்மையான வாக்களிப்பு தினத்துக்கு முன்னதாக முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வர வேண்டும்,” என்றார் அவர்.

வாக்களிப்பு நேரம் முடிந்ததும் வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்படும். சம்பந்தப்பட்ட கட்சிகளின் தேர்தல் முகவர்கள் கையெழுத்திடுவர். ஒரு நாளைக்கு மேல் வாக்களிப்பு நிகழுமானால் புதிய வாக்குப் பெட்டி பயன்படுத்தப்படும். 

“அந்த வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும். அதனைப் போலீசார் காவல் புரிவர். தேர்தல் முகவர்கள் விரும்பினால் அவர்களும் காவல் காக்கலாம்.”

‘மருத்துவர்கள், தாதியர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரை முன் கூட்டியே வாக்களிக்க அனுமதிப்பது பற்றிக் குறிப்பிட்ட அப்துல்  அஜிஸ் அந்த விஷயம் இன்னும் விவாதிக்கப்படுவதாகச் சொன்னார். கடமையில் ஈடுபட்டிருக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னைப் போல அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பிக்கலாம்,” என்றார் அவர்.

TAGS: