பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்கிற்கு எதிராகப் பல தனிநபர்கள் போலிஸ்சில் புகார்களைச் செய்துள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்களும் பூமிபுத்திரா அல்லாதவர்களும் நாட்டின் “ஊழலின் வேர்களில்” பெரும்பகுதியைக் கொண்டுள்ளனர் என்ற அவரின் இனவாத தூண்டுதல் கருத்து இனதுவேசமானது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செந்தூல் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள உலக மனித உரிமைகள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.சசிகுமார், ஹாடியின் அறிக்கை வெளியாகி 8 நாட்களாகியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
“இன்றைய அறிக்கையில், தேசத் நிந்தனை சட்டத்தின் கீழ் ஹடி மீது எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்றார் சசி.
மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது பிரிவின்படி சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமம் என்பதால், அவர் ஒரு இஸ்லாமியக் கட்சியின் தலைவர் என்பதற்காக இரட்டைக் கொள்கையைப் பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று சசி குமார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹடி உட்பட யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.
“பாஸ் தலைவர் மற்றும் பாஸ் கட்சியும் பல இன, பன்முக கலாச்சார மற்றும் ஒருமித்த மலேசியாவின் அமைதியான சுகவாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்” என்று அவர் வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் 20 அன்று, ஹடி தனது முகநூலில் மலாய்க்காரர்கள் வாக்களிப்பதில் அக்கறையற்றவர்கள் என்று குற்றம் சாட்டினார், இதன் விளைவாகத்தான் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களும் மற்றும் “தாராளவாதிகளும்” கடந்த பொதுத் தேர்தலில் நாட்டின் அரசியல் அதிகாரத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றனர் என்ற வகையில் எழுதியிருந்தார்.
அந்த மராங் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், சட்டவிரோதமான வழிகளில் லாபம் ஈட்டியவர்களிடமிருந்து ஊழல் உருவானது என்றும், அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் பூமிபுத்தரா அல்லாதவர்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
ஹடிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்த டிஏபி உட்பட, அரசு சாரா அமைப்புகள், ஹடி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்து வருகின்றனர்.
மேலும், மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (எம்சிபி) தீவிரப் போராட்டத்தால் எப்படிக் கலைக்கப்பட்டது என்பது போல, கட்சியின் தீவிரவாதக் கருத்தியலின் அடிப்படையில் பாஸ் கட்சியைக் கலைக்க அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சஷி குமார் கூறினார்.
“ஹாடி இன மற்றும் மத அட்டையை விளையாடுவதன் மூலம் அடுத்த 15வது பொதுத் தேர்தலுக்கு ஆதரவைப் பெற முயல்கிறார் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.” என்றார்.
“பாஸ்S போன்ற அரசியல் கட்சிகள் நமது கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் அல்லது ருக்குன் நெகாராவின் கொள்கைகளுடன் இணைந்திருக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.