தைவான் நிலநடுக்கம்: 600 மீட்டர் நீளமான பாலம் இடிந்து விழுந்து முற்றாக சேதம்

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 மீட்டர் அளவிலான அழகிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ள கவோலியாவ் பாலம் இடிந்து விழுந்துள்ளது.

தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சில வினாடிகள் மட்டுமே இந்த நிலநடுக்கம் நீடித்திருந்தாலும், சிஸ்ஹேங் மற்றும் யாலி நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.

இதனால் மக்கள் அச்சத்தில் கட்டிடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் அடைந்தனர்.

600 மீட்டர் நீளமுள்ள கவோலியாவ் பாலம்

இந்நிலையில் தைவானில் உள்ள  600 மீட்டர் நீளமுள்ள கவோலியாவ் பாலம் இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது.  இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பரவலாக அனைவரினாலும் பார்க்ப்பட்டு வருகின்றது.

பார்ப்பதற்கே வியப்போடு அழகையும் தன் வசம் கொண்டிருக்கும் இந்த பாலம்,பல சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையிலும் அமைந்துள்ளது தான் இதன் கூடுதல் சிறப்பு.

இதுபோன்ற பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுனாமி எச்சரிக்கை

ஜப்பான் வானிலை மையம் இந்த நிலநடுக்கத்தையடுத்து தைவானை ஒட்டிய அந்நாட்டின் தென்பகுதி தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை திரும்பப் பெற்று்ள்ளது.

மேலும் தைவானைப் புரட்டிப் போட்ட இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே சமயம் 1999ல் 7.3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மற்றும் கடந்த 2016ல் தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-mm