‘போலந்தில் ரஷ்யாவின் ஏவுகணை விழுந்ததில் இருவர் மரணம்’

உக்ரேனைக் குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பாய்ச்சப்பட்ட வேளையில் ஓர் ஏவுகணை போலந்தில் விழுந்ததில், இருவர் மாண்டனர்.

உக்ரேன் எல்லைக்கு அருகே, கிழக்குப் போலந்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த வெடிப்பால் அவ்விருவர் கொல்லப்பட்டதாகப் போலந்தின் வெளியுறவு அமைச்சு உறுதிசெய்துள்ளது. போலந்து நேட்டோ கூட்டணியில் ஒரு உறுப்பினராக உள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலால் நேட்டோ கூட்டணி நாடுகள் தற்போது உச்ச விழிப்புநிலையில் உள்ளன. சம்பவம் குறித்து கூட்டணி விசாரணை நடத்திவருவதாகவும் போலந்துடன் அணுக்கமான தொடர்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

ராணுவத் துருப்புகளைத் தயார்ப்படுத்தும் போலந்து, தோழமை நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்துவது குறித்துப் பரிசீலிக்கிறது.

ஏற்கெனவே பிரிட்டிஷ் பிரதமருடனும் அமெரிக்க அதிபருடனும் போலந்து அதிபர் தொலைபேசி வழி பேசிக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

போலந்துக்குள் அந்த ஏவுகணையை ரஷ்யா பாய்ச்சியதாக உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு அதை முற்றிலும் மறுத்துவிட்டது.

நேற்று (15 நவம்பர்) ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் கொண்டு உக்ரேனைத் தாக்கியது. தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் தாக்கப்பட்டன.

 

 

-smc