மனிதர்களை அனுப்பும் திட்டம்: நிலவுக்கு ராக்கெட்டை ஏவியது அமெரிக்கா

ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர். விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது. முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன.

இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவ கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் (14ம் தேதி) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்திருந்த நிலையில் சூறாவளி புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து 16ம் தேதி (இன்று) ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்தது.

அதன்படி நேற்று நள்ளிரவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாரான நிலையில் திடீரென்று ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

ராக்கெட்டை ஏவுவதற்காக கவுன்ட்- டவுன் நடந்தபோதும் மறுபுறம் வாயு கசிவை சரி செய்யும் பணி நடந்தது. இதனால் ஆர்டெமிஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. கோளாறை சரிசெய்தபின் இந்திய நேரப்படி இன்று மதியம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வாயு கசிவு காரணமாக ராக்கெட் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர். நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது. விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.

 

 

-mm