ரஷியா தாக்குதலால் உக்ரைனில் ஒரு கோடி பேர் மின் வசதி இல்லாமல் தவிப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை

ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டு உள்ளது. இந்த நகரங்களில் மின் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. 9 மாதங்கள் முடிந்தும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகிவிட்டனர். ரஷியா நடத்திய ஏவுகணை வீச்சில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.

தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் பொது மக்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இந்த போரால் உக்ரைனில் சுமார் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் மின்சார வசதி இல்லாமல் தவித்து வருவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டு உள்ளது.

இதனால் ஓடெசா, சுமி, கிவ், வின்னிட்சியா உள்ளிட்ட நகரங்களில் மின் வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கபட்டு உள்ளனர். வின்னிட்சியா, சுமி ஆகிய நகரங்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நகரங்களில் மின் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

-mm