ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு; 63 பேர் பலி, 200 பேர் காயம்

ஈராக் தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டு, சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரின் ஷியா மற்றும் சுன்னி இன மக்கள் வசிக்கும் 13 இடங்களில் 14 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என்று ஈராக் உள்துறை அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்தது.

இத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுபேற்கவில்லை. ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய ஓரிரு நாட்களில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஈராக்கில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய ஒற்றுமை அரசாங்கம் தமக்குள் ஏற்பட்டுள்ள விரிசல்களை எதிர்கொண்டுவரும் நிலையிலும் இனமோதல்கள் அதிகரிக்கக் கூடும் என்று அச்சங்கள் எழுந்துள்ள நிலையிலும் இத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள தாக்குதலை பார்க்கும் போது, சுன்னி இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அல் கயீதா தீவிரவாத அமைப்புக்கே இவ்வாறான தாக்குதலை நடத்தும் வல்லமை உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த காலை நேரத்தில், பலர் வேலைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.