சீனாவில் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

சீனாவில் COVID-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை ஒட்டித் தலைநகர் பெய்ச்சிங்கிலும் ஷங்ஹாய் நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமையை மதிக்கும்படி சீனாவை ஐக்கிய நாட்டு நிறுவனம் கேட்டுக்கொண்டது.

ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மக்கள் திரண்ட பெய்ச்சிங் சந்திப்பில் காவல்துறையினர் அவர்களுக்காகக் காத்திருந்தனர். பெரிய அளவில் பேரணி நடத்துவதற்கு இணையத்தில் விடுக்கப்பட்ட அழைப்பை ஒட்டி அதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைச் சீனா எடுத்துள்ளது.

சிறிய அளவில் மட்டுமே மக்கள் திரண்டதாகச் சமூக ஊடகங்கள் கூறுகின்றன. ஷங்ஹாய் நகரிலும் நேற்று (28 நவம்பர்) ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் முன்கூட்டியே இன்று தடுப்பு போடப்பட்டுள்ளது.

நேற்றிரவு ஆர்ப்பாட்டம் ஏற்பட்ட அந்த இடத்தில் இன்று பெரும்பகுதி அமைதி நிலவியது. சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டதாகவும் காவல் துறையினர் பலரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

COVID-19 முடக்கநிலைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதிபர் சி சின்பிங் (Xi Jinping) பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் கொடுத்தனர்.

 

 

-smc