தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களின் விலைகளைக் குறைக்க சந்தை விலையைப் பயன்படுத்த வேண்டும் என்று நுகர்வோருக்கு அவர் விடுத்த அழைப்பைப் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி இன்று ஆதரித்தார்.
அவரது கூற்றுப்படி, உணவுச் சில்லறை விற்பனையாளர்கள், குறிப்பாக உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் வசூலிக்கும் விலைகள் சந்தையில் மூலப் பொருட்களுக்கான செலவுகள் நிலையானதாக இருந்தபோதிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தரவுகள் காட்டுகின்றன.
மூலப்பொருட்களுக்கான விநியோகம் மற்றும் செலவு இயல்பு நிலைக்குத் திரும்பி, பணவீக்க விகிதம் குறையும்போது, அந்தக் குறைவு நுகர்வோரின் நன்மைகளில் பிரதிபலிக்கிறது என்பதை உறுதி செய்வது பொருளாதாரத்தின் பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் தனது கடமை என்று ரஃபிஸி (மேலே) கூறினார்.
“அரசாங்கம் அதன் வளங்களைப் பயன்படுத்தி விலைகளை நிலைப்படுத்தத் தலையிட்டால், மூலப் பொருட்களுக்கான செலவுகள் குறையும்போது, நுகர்வோர்மீது விதிக்கப்படும் விலைகளும் விகிதாச்சார அடிப்படையில் குறைவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்று அவர் புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.