உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ரஷியாவைப் பொருத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
தொடர்ந்து நீடிக்கும் இந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரஷியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷியா எச்சரித்துள்ளது.
டாங்கிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை அனுப்புவது எந்த விதத்திலும் மோதலில் ஈடுபடுவதாக ஆகாது என்று ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து கூறுகின்றன. ஆனால், இதை நாங்கள் ஏற்கவில்லை. ரஷியாவைப் பொருத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது. போர் விரிவடைவதையும் காண்கிறோம்’ என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறினார்.
-mm