இரண்டாண்டு தடைக்குப் பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மீண்டும் ட்ரம்ப்

பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால தடை முடிந்து அவர் மீண்டும் அவற்றில் அனுமதிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விரைவில் அவர் இந்தத் தளங்களில் இயங்க அனுமதிகப்படுவார் என்று மெட்டா சர்வதேச விவகாரங்களின் தலைவர் நிக் க்ளெக் தெரிவித்தார். இது குறித்து நிக், “2021 அமெரிக்க கலவரத்திற்குப் பின்னர் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்படுகிறது. இருப்பினும் சில கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. மீண்டும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் ஒவ்வொரு விதிமீறலுக்கும் இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும்” என்றார்.

ட்ரம்பும் சமூக வலைதள தடையும்.. அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். முதல் முறை அதிபராக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார். அப்படிப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களே மிகுதி. சமீப காலத்தில் வெற்றியைத் தவறவிட்டவர்கள் மூன்று பேர். ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் டபிள்யூ புஷ் வரிசையில் டொனால்டு ட்ரம்ப் இணைந்தார்.

அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. அந்தப் போராட்டங்களின் போது ட்ரம்ப் சமூக வலைதளங்கள் வாயிலாக வெறுப்பை விதைத்ததாகக் கூறி பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்தன.

அதன் பின்னர் ட்ரம்ப் தனக்கென்று தனியாக ஒரு சோஷியல் மீடியா தளத்தையும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால தடை முடிந்து அவர் மீண்டும் அவற்றில் அனுமதிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

 

-th