ஹாக்கி உலகக் கோப்பை 2023, சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி

நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பெல்ஜியம் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் வாகை சூடியுள்ளது ஜெர்மனி.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு ஹாக்கி விளையாட்டு மைதானங்களில் இந்த தொடருக்கான போட்டிகள் நடைபெற்றன. தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றன. அதில் ஜெர்மனியும், பெல்ஜியம் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் பெல்ஜியம் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டி புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 9 மற்றும் 10-வது நிமிடத்தில் 2 கோல்களை பதிவு செய்து முன்னிலை பெற்றது பெல்ஜியம். தொடர்ந்து 28, 40 மற்றும் 47-வது நிமிடத்தில் மூன்று கோல்களை பதிவு செய்து ஜெர்மனி முன்னிலை பெற்றது. 58-வது நிமிடத்தில் பெல்ஜியம் மூன்றாவது கோலை பதிவு செய்து ஆட்டத்தை 3-3 என சமன் செய்தது.

ஆட்டத்தில் முடிவை எட்ட பெனால்டி ஷூட்அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் ஜெர்மனி 5 கோல்களை பதிவு செய்தது. பெல்ஜியம் 4 கோல்களை மட்டுமே பதிவு செய்தது. அதன் மூலம் ஆட்டத்தில் வெற்றி பெற்றது ஜெர்மனி. ஹாக்கி உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஜெர்மனி.

 

 

-th