ஜப்பானியக் குடிமக்களுக்கு மீண்டும் விசா வழங்கும் சீனா

ஜப்பானியக் குடிமக்களுக்கு மீண்டும் விசா வழங்கப்படும் எனத் தோக்கியோவிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவில் கோவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்த நேரத்தில் அங்கிருந்து வரும் பயணிகள் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறியிருந்தது ஜப்பான். அதற்குப் பதிலடியாகச் சீனா ஜப்பானியர்களுக்கு விசா கட்டுப்பாட்டை அறிவித்திருந்தது.

எனினும் தற்போது அந்த விசா கட்டுப்பாடு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று முதல் ஜப்பானியக் குடிமக்களுக்கு வழக்கம்போல் விசா வழங்கப்படும் எனச் சீனா அறிவித்துள்ளது.

ஆயினும் இதே காரணத்துக்காகத் தென் கொரியர்களுக்கு விசா வழங்குவதில் விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையைச் சீனா இன்னும் மீட்டுக்கொள்ளவில்லை. ஆனாலும் சீனாவிலிருந்து நேரடி விமானங்கள் மூலம் ஜப்பானுக்குச் செல்பவர்கள் கிருமித்தொற்று இல்லை எனும் பரிசோதனை முடிவுகளைக் காட்ட வேண்டும் என்ற நடைமுறை இருந்துவருகிறது.

ஜப்பான் சென்றடைந்த பின்னரும் அவர்கள் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். சீனாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்தே அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஜப்பான் இம்மாதத் தொடக்கத்தல் கூறியிருந்தது.

ஆனால் தோக்கியோ பாரபட்சமாய் நடத்துவதாக இதற்கு முன்னர் பெய்ச்சிங் சாடியிருந்தது.

 

-sm