ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டம்: நள்ளிரவில் வடகொரியா நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள்

வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டத்தையொட்டி, நள்ளிரவில் அந்த நாடு நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டது, உலக அரங்கை அதிர வைத்தது.

வடகொரியா ராணுவ தினம் வடகொரியா தொடர்ந்து நடத்தி வந்த அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகள் விதித்துள்ளன.

இன்னொரு பக்கம், அங்கு கொரோனா தொற்றால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது.இந்த நிலையிலும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து வருகிற வடகொரியா, நேற்று தனது ராணுவத்தை நிறுவிய 75-வது ஆண்டு தினத்தைக் கொண்டாடியது. நள்ளிரவில் ராணுவ அணிவகுப்பு இதையொட்டி பியாங்யாங் நகரில் நள்ளிரவில் மிகப்பெரிய அளவில் நீண்ட தொலைவு ஏவுகணைகளுடன்கூடிய ராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்திக்காட்டியது.

இந்த அணிவகுப்பில் இதுவரை இல்லாத அளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மிகப்பெரிய அளவில் வடகொரியா வரிசைப்படுத்திக் காட்டியது. ஏறத்தாழ ஒரு டஜன் எண்ணிக்கையிலான இத்தகைய ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இது உலக அரங்கை அதிர வைத்ததுடன், அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு சவால் விடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-dt