சிரியாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அது மிகவும் முக்கியம் என்று நிறுவனம் சொன்னது.
5 மில்லியனுக்கும் அதிகமானோர் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து விட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பு கூறியது. வட மேற்குப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சிரியா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் அது போர் நடக்கும் பகுதி என்பதால் உதவிகள் தாமதமாகவே அங்கு சென்று சேர்ந்தன. 20 வாகனங்கள் கொண்ட 2ஆவது அணி துருக்கியே வழியாக சிரியா சென்று சேர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சிரியா அதிபர் பஷார் அல் அஸ்ஸாட் (Bashar Al Assad) பார்வையிட்டுள்ளார். துருக்கியேவிலும் சிரியாவிலும் நிலநடுக்கத்தால் மாண்டோர் எண்ணிக்கை 23,000ஐத் தாண்டிவிட்டது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தைகள் சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பேரிடரைச் சமாளிப்பதில் சில சிரமங்கள் இருப்பதாக துருக்கியே அதிபர் ரிசப் தய்யிப் எர்துவான் (Recep Tayyib Erdogan) ஒப்புக்கொண்டார்.
-sm