நிலநடுக்கம் எதிரொலி: துருக்கி, சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்கள்; ஜெர்மனி அறிவிப்பு

நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்து உள்ளது. பெர்லின், துருக்கி மற்றும் சிரியா நாடுகளில்.

எல்லையில் கடந்த வார திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் 100-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

அவர்களுக்கு உதவிட ஜெர்மனி அரசு முடிவு செய்து உள்ளது. இதன்படி நிலநடுக்கம் பாதித்த துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டு உள்துறை மந்திரி நான்சி பீசர், பில்த் என்ற தினசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்து வரும் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களை ஜெர்மனிக்குள் வர அனுமதிக்க விரும்புகிறோம்.

அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வரலாம். இதற்காக விசா கெடுபிடிகள், அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசரகால உதவி என கூறியுள்ளார். நிலநடுக்க பாதிப்பில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவியாக, இந்தியா போன்ற உலக நாடுகள் மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை விமானங்களில் அனுப்பி வருகின்றன. 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த பேரிடர் நிவாரண படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

-dt