அணுவாயுதங்கள் வேண்டாம், சமரசப் பேச்சில் ஈடுபடுங்கள் – ரஷ்யா, உக்ரேனிடம் சீனா வேண்டுகோள்

உக்ரேனையும் ரஷ்யாவையும் உடனடியாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டுமெனச் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

ரஷ்ய-உக்ரேன் போரின் ஓராண்டு நிறைவு இன்று (24 பிப்ரவரி) அனுசரிக்கப்படும் நிலையில் அது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ரஷ்யாவும் உக்ரேனும் ஒரே இலக்கை நோக்கிச் செயல்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்கவேண்டும், என்று அது குறிப்பிட்டது.

பூசலில் அணுவாயுதங்களைப் பயன்படுத்தவிருப்பதாக ரஷ்ய அதிபர் எச்சரித்துள்ளார். அணுவாயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது. அவற்றைப் பயன்படுத்தப் போவதாக மிரட்டுவதும் கூடாது என்று சீனா தனது அறிக்கையில் சொன்னது.

அனைத்துலக மனிதாபிமானச் சட்டப்படி பொதுமக்களைத் தாக்காமல் தவிர்ப்பது முக்கியம் என்றும் பெய்ச்சிங் குறிப்பிட்டது. ரஷ்ய-உக்ரேன் போரைப் பொறுத்தவரை சீனா நடுநிலை வகிப்பதாகக் கூறுகிறது.

ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை, உக்ரேனிலிருந்து ரஷ்யத் துருப்பினர் நிபந்தனையின்றி வெளியேற வேண்டும் என்னும் தீர்மானத்தை முன்வைத்திருந்தது.

அதற்கான வாக்கெடுப்பில் சீனா பங்கேற்கவில்லை.

 

-sm