குதப்புணர்ச்சி II வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நாளான ஜனவரி 9-இல், பேரணி நடத்தவும் “குழப்பம்” விளைவிக்கவும் மக்களைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படுவதை பிகேஆர் மறுக்கிறது.
பிகேஆர் உறுப்பினர்களைப் பேரணி நடத்துமாறு தாம் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறும் குறுஞ்செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
“அதை நான் வன்மையாக மறுக்கிறேன். அடுக்குமுறைக்கும் கொடுமைக்கும் எதிராக மக்கள் கொதித்தெழுவார்கள் என்ற பயத்தில் அம்னோ அப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அன்று அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்கத் திரளும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அமைதியாக ஒன்றுகூடி அதிகாரிகளின் உத்தரவுப்படி நடந்து கொள்ள வேண்டும்; ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றவர் வலியுறுத்தினார்.
அன்வார், 2008-இல் அவரின் உதவியாளர் முகம்மட் சைபுல் புகாரியைக் குதப்புணர்ச்சி உள்ளாக்கினார் என்று குற்றம்சாட்டப்பட்டு ஈராண்டுக் காலமாக நடைபெற்று வந்த வழக்கில் ஜனவரி 9-இல் தீர்ப்பளிக்கப்படுகிறது.