வங்கதேச அதிபராக ஷகாபுதீன் பதவியேற்பு

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி ஆட்சியில் உள்ளது. பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகிக்கிறார். அதிபராக அப்துல் ஹமீத் பதவி வகித்தார். இவரது பதவிக் காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. முன்னதாக ஆளும் அவாமி லீக் சார்பில் புதிய அதிபராக மொகமத் ஷகாபுதீன் அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் போட்டியின்றி ஒருமனதாக ஷகாபுதீன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து பதவியேற்பு விழா தலைநகர் டாக்காவில் உள்ள ‘பங்காபாபன்’ தர்பார் மண்டபத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அப்போது வங்கதேசத்தின் 22-வது அதிபராக 73 வயதான மொகமத் ஷகாபுதீனுக்கு சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்பின், ஆவணங்களில் ஷகாபுதீன் கையெழுத்திட்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் ஷேக் ஹசீனா, ஷகாபுதீனின் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

ஷகாபுதீன் கடந்த 1949-ம்ஆண்டு பிறந்தவர். சில காலம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர். ஊழல் தடுப்பு ஆணையராக பொறுப்பு வகித்தார். பின்னர் அரசியலில் நுழைந்து ஆளும் அவாமி லீக் கட்சியின் ஆலோசனை குழு உறுப்பினரானார். இவருடைய மனைவி ரெபேக்கா சுல்தானாவும், அரசில் இணை செயலராகப் பணியாற்றியவர். ஷகாபுதீன் – ரெபேக்கா தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

 

 

-th