மறைந்த வடகொரியத் தலைவர் கிம் யாங் இல்-லின் இறுதிச் சடங்கு அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் நடந்துள்ளது. அவரின் பூதவுடலை அடக்கஸ்தலத்துக்கு கொண்டுசெல்லும் மாபெரும் இறுதி ஊர்வலம் பியாங்யாங் வீதிகளைக் கடந்து சென்றபோது, அந்நாட்டு மக்கள் கதறிக் கண்ணீர்விடும் காட்சிகளை பல இடங்களில் காணமுடிந்தது.
பனி மூடி வெள்ளை ஆடை உடுத்தி நிற்கும் வீதிகளைக் கடந்து சிகப்பு கம்பளம் போர்த்தப்பட்ட சவப்பெட்டியுடன் வாகனத் தொடரணி சென்றபோது இராணுவ வீரர்கள் தலை குனிந்து மரியாதை செலுத்துவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.
“துக்கத்தில் தனது இருதயமே வெடித்துவிடும்போல் இருக்கிறது” என்று இராணுவ வீரர் ஒருவர் கூறினார்.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக இறுதிச் சடங்கு ஆரம்பிப்பது நான்கு மணி நேரங்கள் தாமதப்பட்டிருந்தது. ஆனாலும் அரசு மரியாதையுடன் நடந்த இந்த இறுதி ஊர்வலத்தை வடகொரியர்கள் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடத்தினர்.
தெய்வத்துக்கு ஒப்பானவராக உருவகப்படுத்தப்பட்ட கிம் யாங் இல்லுக்கு நகரத்தின் மையத்திலுள்ள ஒரு சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
‘மாதளபதி’ என்று வடகொரியர்கள் மரியதையுடன் அழைத்து வந்த வந்த கிம் யாங் இல்-லை முறையாக வழியனுப்பிவைக்க வேண்டும் என்பது இந்த கண்கவர் சடங்கின் நோக்கமாக இருந்தாலும், இல்லின் வாரிசாக அவரது இளைய மகனை நிலைநிறுத்த வேண்டும் என்பதும் இதன் நோக்கமாகத் தெரிந்தது.
மறைந்த வடகொரியத் தலைவர் கிம் யாங் இல்-லின் இறுதிச் சடங்கு நடைபெற்றபோது நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்தில் ஐநா கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.