அடுக்குமாடி மாடும்! கோவணம் வாங்க பணமும்!

[கா. ஆறுமுகம் ]

முனுசாமியும், முனியம்மாவும் மலேசியாவில் பிறந்திருந்தும் இன்னும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. இவரோடு சண்முகம், குப்பன், சுப்பன், பெருமாள், அஞ்சலை, மாலதி, பவாணி என்று இன்னொரு 42,000 மலேசிய இந்தியர்களுக்கும் இதே கதிதான். அதேவேளை அண்மையில் குடியேறிய ஆயிரக்கணக்கான அயல் நாட்டவர்களுக்கு மலேசிய அரசாங்கம் குடியுரிமைகளை வழங்கியுள்ளது.

மலேசியா என்பது அரசமைப்பிற்கு உட்பட்ட நாடாக இருந்தாலும், எதனால் இந்த ஓரவஞ்சனை? அதுவும் அடையாள அட்டையில்லாத நிலையில் 42,000 நபர்கள், குடியுரிமை அற்ற நிலையில் 16,000. ‘மை டப்தார்’ என்ற மஇகா-வின் முயற்சியில் 9,568 நபர்கள் மறுவிண்ணப்பம் செய்ததில் 164 நபர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. (தகவல் : ம.இ.கா வெளியிட்ட சாதனை அறிக்கை 2011, மை இந்தியன் அகப்பக்கம்). இதற்காக நாம் ம.இ.கா-வை காறித்துப்பத் தேவையில்லை. அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதி என்று விடுதலையடைந்தது முதல் மார்த்தட்டும் இந்த எல்லாம் வல்ல இந்தியர்களின் அரசியல் அமைப்பால், யானை அளவு பிரச்சனைக்கு எறும்பு அளவு தீர்வையே காண முடிந்ததிற்கு என்ன காரணம்?

ம.இ.கா என்ற பிரதிநிதித்துவம் அரசாங்க கொள்கைகளிலும் அதன் அமுலாக்க நடைமுறையிலும் எதையும் செய்ய இயலாது. அதனால் ஒரு வாலாட்டும் நாயாகத்தான் நன்றியுடம் செயல்பட இயலும்.

2008-ம் ஆண்டு தேசிய முன்னணி அடைந்த பலத்த தோல்வி அதை ஆட்டம் காண செய்தது. அது மீண்டும் தனது பலத்தைப்பெற, இந்தியர்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. எனவே, அரசாங்கம் இந்தியர்களின் பிரச்சனைகள உணர்ந்துவிட்டது, அறிந்து விட்டது, செயலாக்கத்தில் இறங்கிவிட்டது என்று ம.இ.கா வெளியிட்ட சாதனை அறிக்கை 2011 காட்டுகிறது.

அதன்படி, தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம 302.8 மில்லியன், உயர்கல்வி பயில கடந்த இரண்டு ஆண்டுகளில் 634 இந்தியர்களுக்கு உபகாரச் சம்பளம், மெட்ரிக்குலேசனில் இவ்வாண்டு 580 மாணவர்கள், உயர்கல்வி நுழைவில் 1,511 மாணவர்கள், இளம் வாணிப ஊக்குவிப்புக்கு ரிம 29 மில்லியன், எம்.ஐ.டி கடனுதவியாக ரிம 8.7 மில்லியன் இப்படியாக தனது சாதனைகளை 17 பக்க கையேட்டில் வெளியிட்டுள்ளது ம.இ.கா!

“இவையெல்லாம் எங்களால் செய்ய முடிந்தவை” என்று தைரியமாக முன்வைத்த ம.இ.கா-வின் “சாதனைகளை” எப்படிப் பாராட்டுவது? இந்த ஒட்டுமொத்த சாதனைகளை எப்படி மதிப்பிடுவது?

ஆண்டுதோறும் சுமார் ரிம 220,000 மில்லியன்களை வரவு-செலவுக்கு பயன்படுத்தும் அரசாங்கத்தின் பட்டு-வாடாவில் நமது நிலைமை என்ன? தனியார்துறை பொருளாதார மேம்பாட்டில் (வங்கிகள், தனியார் மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், வானுயர எழுந்துள்ள கட்டடங்கள், ரிம 800,000 மில்லியனுக்கு உயர்ந்துள்ள பங்கு மார்கெட்) நம்முடைய நிலையை ஒப்பிட்டுப்பார்த்து, அதன்வழி எவ்வகையில் நமது சமூக-பொருளாதார நிலை உள்ளது என்று கணிக்கையில் நமக்கு மிஞ்சுவது என்ன? மலேசியா ஒரு பணக்கார நாடு, துரிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

‘அடுக்குமாடி கட்டடத்தில்’ மாடு வளர்க்க சரிசாட் குடும்பம் பெற்ற (ரிம 300 மில்லியன்) தொகைக்கு ஈடாக 20 லட்சம் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ம.இ.கா, தமிழ்ப்பள்ளிக்கு நிதி ஒதுக்கீட்டை பெற்று சாதனை படைத்துள்ளதை நம்மால் எப்படி ஜீரணிக்க முடியும்?

அருருவருப்பான உணர்வுகளை தட்டி எழுப்பும் இந்த சூழல், நாம் அந்நியப்படுத்தப்பட்டுள்ளதை உணர்த்துகிறது. நாம் ஏமாற்றப்பட்டு சுரண்டப்பட்டதை காட்டுகிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக ரிம 100-ஐ கொடுத்து “இதோ மிட்டாய், அழாதே!” என்ற நிலையில் கொடுக்கிறார்கள். இதை பலமுறை தொலைக்காட்சியில் போட்டு அரசாங்கம் எவ்வளவு பரிவானது எனக் காட்டுகிறார்கள். என்ன வேடிக்கை!

நிர்வாணமாக்கப்பட்ட நிலையில், நம்மால் அதைக்கொண்டு ஒரு கோவணம்தான் வாங்க இயலும்!

தனிநபர் வருமானம் 2015-ல் ரிம 38,845 அதிகரிக்கும் ( தற்போது ரிம 28,585) என்பதும், அனைவரும் அரவணைக்கப்பட்ட வகையிலே நாட்டின் வளர்ச்சியும்-மேம்பாடும் அமையும் என்ற கொள்கைவாதமும், ஒரே மலேசியா வேதமும், இந்தியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எட்டாக்கனிகளாகவே இருக்கும். அதை நம்பி அரசியல் நடத்தும் ம.இ.கா (மற்றும் ஐ.பி.எப், பிபிபி, மக்கள் சக்தி கட்சி போன்றவை) செய்யும் மிகவும் கேவலமான செயல் தொடர்ந்து இந்தியர்களை மீண்டும் இலவு காக்கும் கிளிகளாகவே உருவாக்க முயல்வதாகும்.

அரசாங்கம் என்பது மலாய்காரர்களுடையது கிடையாது. அது மக்களுடையதாக உருவாக்கப்படவேண்டும். அதை செய்ய இந்த இடைத்தரகர்களால் இயலாது. இன்று உலகமே எழுந்து நிற்கிறது. இயற்கை சீறுகிறது. மலேசிய இந்தியர்கள் விதிவிலக்கல்ல, துணிவார்கள், மானங்கெட்ட அரசியலுக்கு சமாதி கட்டுவார்கள் என்ற நம்பிக்கை எழுகிறது.

TAGS: