ஆறு இரண்டாம் தலைமுறை ரோந்துக் கப்பல்கள் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதால் தம்மை சந்திக்குமாறு தற்காப்பு அமைச்சர் ஸாகிட் ஹமிடி பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இவ்வாண்டு பெப்ரவரி 5 இல் இந்த ஆறு கப்பல்களின் மொத்த விலை ரிம6 பில்லியன் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இம்மாதம் அவற்றின் விலை 50 விழுக்காடு உயர்ந்து ரிம9 பில்லியன் ஆகியுள்ளது.
பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ், அதன் துணை நிறுவனமான பவுஸ்டெட் நேவல் ஸிப்யார்ட் செண்ட் பெர்ஹாட் இந்த ஆறு கப்பல்களை புதிய உச்ச விலை ரிம 9.0 பில்லியனில் நிர்மாணித்து ஒப்படைப்பதற்கான ஒப்பந்தக் கடிதத்தை தற்காப்பு அமைச்சிடமிருந்து பெற்றுள்ளது என்று பர்ஸா மலேசியாவிடம் தெரிவித்துள்ளது.
“இக்கப்பல்களுக்கான தொடக்க விலை ரிம6 பில்லியனே அதிகப்படியானது என்ற சர்ச்சை இருக்கின்ற வேளையில், இந்தக் கடுமையான விலையேற்றத்திற்கான விளக்கம் நாடாளுமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைசர் ஸாகிட்டை நாங்கள் கேட்டிருந்தோம்”, என்று டோனி புவா கூறினார்.
ரிம6 பில்லியன் விலையைத் தற்காத்து பேசிய அமைச்சர் ஸாகிட் இது சாதாரண கப்பல்கள் அல்ல. இவை மிக நவீனமான “கடற்கரை போர் சார்ந்த கப்பல்கள் (எல்சிஎஸ்) என்றார்.
மேலும், இந்த எல்சிஎஸ் “பெரியதும் வேகமானதும்” என்பதோடு அவற்றில் மூன்று பரிமாண போர் ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை ஜெட் விமானங்களையும், கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் தாக்கும் வல்லமை பெற்றவை என்று கடந்த மார்ச் மாதத்தில் ஸாகிட் கூறியிருந்தார்.
“ஜெட் விமானங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழிகள் ஆகியவற்றை தாக்குவதற்கு ஏதுவான நவீன ஆயுதங்கள் அந்த ரிம6 பில்லியன் விலையில் அடங்கியிருக்கையில், ரிம3 பில்லியன் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை நியாயப்படுத்துவதற்கு வேறு எதனை தற்காப்பு அமைச்சு சேர்த்துள்ளது?”, என்று புவா அவரது செய்தி அறிக்கையில் வினவுகிறார்.
ஒரு ரோந்துக் கப்பலின் விலை ரிம1.5 பில்லியன் என்றால், நமது கப்பல்கள் உலகில் மிக உயர்ந்த விலையானதாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
கேட்கப்பட்ட கேள்விக்கு பகிரங்கமான விளக்கத்தை பொதுமக்களுக்கு அளிப்பதற்குப் பதிலாக நேற்று ஸாகிட் தம்மை கிண்டல் செய்தார் என்றார் புவா.
“அவரது விலைக்குறிப்பீடுகள் அவருக்கு எங்கிருந்து கிடைத்தன? முன்னாள் டிஎபி எம்பி குவா கியா சூனிடமிருந்தா?”, என்று ஸாகிர் கூறியதாக புவர் தெரிவித்தார்.
“எனது அறிக்கைகளை அவர் படித்திருந்தால், அத்தகவல்கள் பவுஸ்டெட் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்தும், நாடாளுமன்றத்தில் அமைச்சரே அளித்த “அதிகாரப்பூர்வமான” பதில்களிலிருந்தும் பெறப்பட்டவை என்பதைத் தெளிவாக கூறியிருக்கிறேன்”, என்று புவா தெரிவித்தார்.
“ஸாகிட்டின் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நூருல் இஸ்ஸா அன்வார் மற்றும் டாக்டர் ஜுல்கெபி அஹமட் உட்பட, தயாராக இருக்கிறோம். ஆனால், அவரது விளக்கம் ரிம9 பில்லியன் கொள்முதல் பற்றியது மட்டுமாக இருக்கக்கூடாது. இவ்வாண்டில் ரிம7.55 பில்லியனுக்கு செய்யப்பட்ட பெரும் கொள்முதலான 257 எவிபி தற்காப்பு வாகனங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ஸாகிட் நாடாளுமன்றத்தில் எவிபிகள் குறித்து எனக்கு அளித்த பதிலில் அவருக்கு அவற்றின் விலை குறித்த விபரங்கள் தெரியாது என்று கூறிக்கொண்டுள்ளார்.
“தமது அமைச்சு ‘வெளிப்படைத்தன்மை கொண்டது’ என்று அவர் கூறியுள்ளதின் அடிப்படையில், தற்காப்பு செலவினங்களை ஆய்வு செய்வதற்கும், கவனிப்பதற்கும் ஒரு நாடாளுமன்ற கண்காணிப்பு குழு (Parliament Oversight Commitee) அமைப்பதை அரசாங்கம் ஏன் விரும்பவில்லை என்பதற்கும் அவர் பதில் அளிக்க வேண்டும்.
“நாட்டின் உச்ச சட்டமன்றமான நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு அமைச்சே உட்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றால், ஸாகிட் ஹமிடிக்கு “வெளிப்படைத்தன்மை” குறித்து பேசுவதற்கான உரிமை கிடையாது”, என்று டோனி புவார் கூறினார்.