சிரியாவின் கிழக்கே ஆளில்லா விமானம் தாக்கியதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டு உள்ளார் என அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது. வாஷிங்டன், சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் இலக்காகின்றனர்.
அவர்களை அழிக்கும் வேலையில் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் கிழக்கே ஆளில்லா விமானம் தாக்கியதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டு உள்ளார் என அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அமெரிக்காவின் மத்திய படை பிரிவு வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் ஒசாமா அல் முஹாஜிர் என்பவர் கொல்லப்பட்டு உள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையில், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது.
அந்த படையின் தலைவர் மைக்கேல் குரில்லா கூறும்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, அந்த பகுதி மட்டுமின்றி அதனை கடந்தும் தொடர்ந்து ஓர் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
அந்த பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என நாங்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
-dt