அத்தியாவசியமற்ற ஹெலிகாப்டர்கள் பயணங்களுக்கு தடை விதித்தது நேபாள அரசு

இமயமலை சார்ந்த தேசமான நேபாளத்தில் விமான விபத்துக்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

மேகங்களால் பெரிதும் சூழப்பட்டு உயர்ந்த சிகரங்களுக்கு அருகில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு பல விமான நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் அடிக்கடி பறக்கின்றன. சுற்றுலா பயணிகளுக்காக இவை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இரு தினங்களுக்கு முன் நேபாளத்தில் தனியார் விமான நிறுவனமான மனாங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றில் 5 மெக்சிகோ நாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்றனர். எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலை சிகரங்களை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பும்போது, அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 5 பேருடன், நேபாள விமானியும் உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய நேபாள அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது நேபாள விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஹெலிகாப்டர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு தடைவிதித்துள்ளது. அத்தியாவசியமற்ற வான் பயணங்களாக கருதப்படும் மலை விமான பயணங்கள், ஸ்லிங் விமானங்கள் எனப்படும் வெளிப்புற சுமை செயல்பாட்டு விமான பயணங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் பொழிவது போன்ற அனைத்து செயல்களும் செப்டம்பர் வரை தடைவிதிக்கப்படுகிறது” என்று நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAN) தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், சுற்றுலா நகரமான பொக்காரா அருகே ஒரு விமானம் விழுந்து நொறுங்கியதில் 71 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துக்களிலேயே, இது மோசமான விமான விபத்தாக பார்க்கப்பட்டது. பருவமழை காலமான இந்த நேரத்தில் இத்தடை வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

-mm