நியூசிலந்தின் நீதி அமைச்சர் கிரி ஆலன் பதவி விலகினார். மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்துத் தாம் உடனடியாகப் பதவியிலிருந்து விலகுவதாகத் திருவாட்டி ஆலன், பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸிடம் தெரிவித்துள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது, காவல்துறை அதிகாரிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கியுள்ளார்.
திருவாட்டி ஆலன் அளவுக்கு மீறி மது அருந்தியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. விபத்துக்குப் பிறகு அவர் காவல்துறைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். விபத்துக் குறித்து மேலும் தகவல்கள் வெளியிடப்படவிலை.
கடந்த ஜனவரியில் ஜசிண்டா ஆர்டனுக்குப் பதிலாக கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் பதவியை ஏற்ற பிறகு அவரது அமைச்சரவையிலிருந்து வெளியேறியுள்ள 4ஆவது அமைச்சர் திருவாட்டி ஆலன். நியூசிலந்தில் அக்டோபர் 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
-fmt