பல்கலைக்கழக மாணவர் குந்தியிருப்பு மறியல் பொது ஒழுங்கிற்கு மருட்டலாக இல்லை புரிகிறதா ?

“மாணவர்கள் யாரையும் தூண்டவில்லை. இடையூறும் செய்யவில்லை. அதனால் போலீசார் அவர்களை அப்படி நடத்தியிருக்க வேண்டியதில்லை.”

மாணவர்: நண்பருக்கு உதவிய போது நான் அடிக்கப்பட்டேன்

மூண்டைம்: ஆர்ப்பாட்டாக்காரர்களையும் ஆட்சேபிக்கின்றவர்களையும் சமாளிக்கும் போது படைபலத்தைப் பயன்படுத்துவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். மாணவர்கள் வன்முறையில் இறங்கி பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க முனைந்தால் மட்டுமே போலீசார் பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

மாணவர்கள் யாரையும் தூண்டவில்லை. இடையூறும் செய்யவில்லை. அதனால் போலீசார் அவர்களை அப்படி நடத்தியிருக்க வேண்டியதில்லை. அன்புள்ள போலீஸ்காரர்களே, நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முதிர்ச்சி அடைய வேண்டும். அதிகார அத்துமீறல்களுக்கான காலம் மலையேறி விட்டது.

அண்மைய ஆண்டுகளில் ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்புப் பேரணிகளிலும் வன்முறைகள் அரிதாகவே நிகழ்ந்துள்ளன. கைக்கூலிகள் யாரும் சூழ்நிலையை குழப்பினால் மட்டுமே வன்முறை மூளுகின்றன.

மாணவர்களுக்கு நிகழ்ந்ததைப் பார்க்கும் போது மலேசியா ஒரு போதும் வளர்ச்சி அடைந்த நாடாக மாறப் போவதில்லை என நான் துணிந்து கூறுவேன். அதன் குடிமக்கள் அனைவரும் “வழிகாட்டப்படும் ஜனநாயக” முறையின் கீழ் கட்டாயமாக கீழ்ப்படிய வேண்டிய சூழ்நிலையில் தான் காலம் காலத்துக்கு வாழ வேண்டும்.

எதிர்ப்பு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் ஆட்சியாளர்களுடைய பிடிவாதமும் கடுமையான போக்கும் மாறப் போவதில்லை. சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு என்னுடைய அறிவுரை இது தான்: உங்களால் முடியுமானால் வெளியேறி விடுங்கள். புலம் பெயர்ந்து வேறு எங்காவது வளமுடன் வாழுங்கள்.

டிஎம்எப்: அன்புள்ள முகமட் சாபுவான் அனாங், உங்களைப் பார்த்து நான் பெருமை அடைகின்றேன். மலாயாப் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் உங்களுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இசா@1பென்யூ: உங்களுக்கு வேண்டும். நீங்கள் கலகக்காரர். அதனால் உங்களுக்கு கிடைத்தது சரியே. உங்களுக்கு எது நல்லது என்பது உங்களுக்குப் புரியவே இல்லை.

நோபீஎண்ட்: சாப்வான், உங்களை முட்டாள் என சிலர் வருணித்ததால் மனமுடைந்து போக வேண்டாம். அவர்களில் சிலர் எந்த பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலைக் கூடத் தொட்டிருக்க மாட்டார்கள்.

உங்கள் கருத்தைத் தெரிவிக்க நீங்கள் அங்கு சென்றீர்கள். உங்கள் உரிமை மலேசிய அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.

ராஸ்புடின்: சாப்வான், பலவானாக உங்களைக் காட்டிக் கொள்ள முயலும் போது நீங்கள் கொடுக்க வேண்டிய விலை இதுதான். நீங்கள் விரைவில் குணமடைந்து எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இல்லை என்றால் அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி நீங்கள் செய்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

அல்: சாப்வானுக்கு அடி விழுந்தது நியாயம் எனக் கூறுகின்றவர்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டனர்.

போலீசார் யாரையும் குற்றவாளிகளையும் கூட அடிக்கக் கூடாது. போலீசார் தொழில் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த வன்முறையைப் பயன்படுத்தாமல் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வரி செலுத்தும் குடிமகன் என்னும் முறையில் நான் கருதுகிறேன்.

அரசாங்கம் மாறும் வரையில் போலீஸ் நடைமுறையில் மாற்றம் ஏற்படும் என நான் எண்ணவில்லை.

அடையாளம் இல்லாதவன்_4056: ஆர்பாட்டம் செய்தவர்கள் மீது வன்முறையைப் போலீசார் பயன்படுத்தியதற்குக் காரணமே இல்லை. அவர்கள் சட்ட ஒழுங்கிற்குக் கட்டுப்படாதவர்கள். குண்டர்களைப் போல இயங்குகின்றனர்.  நாகரீகமற்றவர்கள்.

அவர்களுக்கு நான் கொஞ்சம் கூட மரியாதை கொடுப்பதில்லை. நான் போலீஸ் அதிகாரியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மக்கள் வரிப்பணத்தில் ஊழலுடன் வாழுகின்ற குடிமக்கள் என்றே சாபமிடுகிறேன்.

பொது நலனுக்காக வேலை செய்யுங்கள். அம்னோவுக்காக அல்ல எனத் தயவு செய்து யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்.

TAGS: