குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் போது தனது மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஜெயிலில் அடைக்கப்படக் கூடிய சாத்தியம் குறித்து எதிர்த் தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் கவலைப்படவில்லை.
“நான் மட்டுமின்றி அஜிஸாவும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரும் சாத்தியமான சூழ்நிலைகளை விவாதித்துள்ளோம்”, என அன்வார் கூறினார்.
இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் பக்காத்தான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
“நான் ஜெயிலில் அடைக்கப்பட்டால், ஒரு விபத்தில் சம்பந்தப்பட்டால் அல்லது சுடப்பட்டால் நாங்கள் ஒன்று, இரண்டு, மூன்று சூழ்நிலைகளை விவாதித்துள்ளோம்.”
பக்காத்தான் தலைமைத்துவம் அவசரத் திட்டங்களை தயாரித்துள்ளது. ஜனவரி 9ம் தேதி இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கு மீது தீர்ப்பு வழங்கப்படும் போது ஏற்படக் கூடிய விளைவுகளை பக்காத்தான் தலைமைத்துவம் நன்கு அறிந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
“அன்வாரை அழிப்பதின் மூலம் பக்காத்தான் தேக்கமடைந்து விடும் என அம்னோவில் யாரும் நினைத்தால் அது நடக்காது. நேர்மாறாகத்தான் நடக்கும். நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம். பக்காத்தானை வழி நடத்தப் போவது அதன் கொள்கைகளே”, என அன்வார் உறுதி அளித்தார்.