“அது அன்வாரைப் பற்றியது அல்ல, அநீதி சம்பந்தப்பட்டது”

“அது அன்வாரை பற்றியது மட்டுமல்ல. சாதாரண மக்களை அரசாங்கம் அலட்சியமாக  அகங்காரத்துடன் நடத்துவது சம்பந்தப்பட்டதாகும்.”

குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு வழங்கப்படும் நாளில் பக்காத்தான் தனது வலிமையைக் காட்டும்

சீனாபுத்ரா: நேர்மையற்ற ஊழல் ஆட்சிக்கு எதிரான வன்முறை இல்லாத ஆர்ப்பாட்டமாக அது இருக்கும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது அன்வாரை பற்றியது மட்டுமல்ல. சாதாரண மக்களை அரசாங்கம் அலட்சியமாக அகங்காரத்துடன் நடத்துவது சம்பந்தப்பட்டதாகும்.

அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் போலீஸ் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் என நம்புவோம். அரசாங்க ஆணைக்கு ஏற்ப போலீஸ் இயங்கக் கூடாது. ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாக ஒடுக்குமாறு அரசாங்கம் நிச்சயம் போலீஸுக்கு உத்தரவு போடும். தாம் மக்களில் ஒர் அங்கம். கோமாளிக் கும்பலில் ஒர் அங்கம் அல்ல என்பதைச் சாதாரண போலீஸ்காரர் உணர வேண்டும்.

வன்முறை மலேசியர்களுடைய வழி அல்ல. அன்றைய தினம் குழப்பம் ஏற்பட்டால் அது நாட்டுக்குச் சோகமான நாளாக இருக்கும். நல்ல உணர்வு நிலைத்திருக்க வேண்டும் என நான் இறைவனை பிரார்த்துக்கிறேன். காரணம் ஏற்கனவே இந்த நாடு பல பிரச்னைகளில் மூழ்கியுள்ளது.

உண்மையாகச் சொன்னால் நான் சாலை ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்பதில்லை. ஆனால் பிஎன் அரசாங்கம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். மக்களுடைய கூக்குரலுக்கு ஒரு முறையாவது செவி சாய்க்க வேண்டும். இப்போது அதிகார வர்க்கம் என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முனைந்துள்ளது. அதன் விளைவு? மிகவும் சோகமான நாடு. மலேசியாவை இறைவன் காப்பாற்றட்டும்.

டாக்ஸ்: அம்னோ வழி நடத்தும் நீதித் துறை அன்வாரை குற்றவாளி என தீர்ப்பளிப்பதை எதிர்பார்த்து அன்வாருக்கு ஆதரவாக 100,000 பேரை திரட்ட பக்காத்தான் ராக்யாட் எண்ணியுள்ளது. என் கேள்விகள்:

1. எதிர்பார்க்கப்படும் அந்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்குப் போதுமான உறுப்பினர்களை கலகத் தடுப்புப் போலீஸ் பெற்றுள்ளதா?

2. பெர்சே 2.0 பேரணியின் போது நிகழ்ந்ததைப் போன்று கைது செய்யப்படும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உணவு வழங்கப்படுமா?

3. கலகத் தடுப்புப் போலீசார் (அ)நீதி மாளிகைக்குள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பாய்ச்சுவார்களா?

அசோகா பிஜே: பாஸ்/டிஏபி/பிகேஆர், ஜனவரி 9ம் தேதி நீதிமன்றத்தில் இருக்குமாறு நீங்கள் அழைத்துள்ளவர்களிடம் அவர்கள் அரச மலேசியப் போலீஸ் படையினரால் பிடிக்கப்பட்டால் பின் வரும் வாசகத்தைச் சொல்லுமாறு தெரிவியுங்கள்.

“நான் நீதிமன்ற தீர்ப்பை செவிமடுக்க மட்டுமே வந்தேன். எனக்கு அடுத்து உள்ளவருடைய நோக்கம் எனக்குத் தெரியாது. ஆகவே சட்ட விரோதமாகக் கூடியதாக நீங்கள் என் மீது குற்றம் சாட்ட முடியாது. நான் தனியாக வந்தேன்.”

அந்த வாசகத்தை மனனம் செய்யுமாறு அனைவரிடமும் சொல்லுங்கள்.

டிஞ்சி: அது ஜெயில் தீர்ப்பு என்றால் குதப்புணர்ச்சி l வழக்கில் தீர்ப்பளித்த காலஞ்சென்ற அகஸ்டின் பால்-ஐ போன்று நீதிபதிக்கு விரைவாக பதவி உயர்வு கிடைக்கும்.

அன்வாரை ஜெயிலில் அடைந்த மனிதரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் கோடீஸ்வரராகி விடுவார்.  அவருக்கு பெரும்பாலும் அகோங்கிடமிருந்து டத்தோ பட்டம் கிடைக்கும் சாத்தியமும் உண்டு.

சைபுலை தேசிய வீரராக அம்னோ கொண்டாடும். ஆனால் 13வது பொதுத் தேர்தலில் பிஎன் புத்ராஜெயாவைத் தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே அது நடக்கும்.

சோலாரிஸ்: நான் சொல்வது தவறு இல்லை என்றால் தாம் “சைபுலை நம்புவதாக” நீதிபதி ஏற்கனவே சொல்லி விட்டார். ஆகவே நாம் எதற்காகக் காத்திருக்கிறோம்? ” ‘அன்வார் எழுச்சியில் இணைந்து கொள்ளுங்கள்’.

இனவாத எதிர்ப்பாளன்: ஜனவரி 9ம் தேதி எவ்வளவு பேர் வரப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகும்.

பெர்சே பேரணியில் 100,000 முதல் 200,000 உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என பாஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால் உண்மையில் அவ்வளவு பேர் வரவில்லை.

பக்காத்தான் வட்டாரத்தில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு செல்வாக்கு இல்லை. ஆகவே தமது வேண்டுகோளுக்கு பக்காத்தான் தலைவர்கள் செவி சாய்ப்பர் என அஸ்மின் கனவு காணக் கூடாது.

பக்காத்தான் தலைவர்களுக்கு இடையில் அரசியல் ரீதியில் முதுகில் குத்தும் வேலைகள் நிறைய நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே பாஸ், டிஏபி எந்த அளவுக்கு அன்வாருக்கு ஆதரவாக தங்களது ஆதரவாளர்களைத் திரட்டும் என்பது கேள்விக்குறியாகும்.

அம்னோ தனது ஆதரவாளர்களை “வாங்குவது” போன்று மக்களைக் கொண்டு வருவதற்குப் போதுமான பணம் பக்காத்தானிடம் கிடையாது. ஆகவே ஜனவரி 9ம் தேதி மீது அனைவருடைய கவனமும் நிலைத்திருக்கும். அன்வாருக்கு உண்மையிலேயே செல்வாக்கு இருக்கிறதா?

TAGS: