பினாங்கில் 48 புதிய கவுன்சிலர்கள் நியமனம்:ஒருவர் செய்தியாளர்

பினாங்கு மாநில அரசு 2012-2013-க்கு 48 புதிய முனிசிபல் கவுன்சிலர்களை நியமனம் செய்துள்ளது.அவர்களில் ஒருவர் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றின் நிருபரான எஸ்.குணாளன்.

கொம்டாரில், கவுன்சிலர் பெயர்களை அறிவித்த பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ, குணாளன், 46, 1990-இலிருந்து டிஏபி உறுப்பினர் என்றார்.

அவர், பிறை தாமான் இந்திராவாசே கிளைச் செயலாளர் என்பதுடன் பத்து கவான் தொடர்புக்குழு உறுப்பினரும் ஆவார்.

பத்து கவான் எம்பி-யாகவும் பிறை சட்டமன்ற உறுப்பினருமாக இருப்பவர் பினாங்கு 2ஆம் துணை முதல்வர் பி.ராமசாமி. 

மக்கள் ஓசை செய்தித்தாளின் பகுதி-நேர பணியாளரான குணாளன், கடந்த மாதம் நடைபெற்ற டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் ஒரு பேராளராகவும் கலந்து கொண்டார்.

ஒரு செய்தியாளரைக் கவுன்சிலராக நியமனம் செய்ததில் பிரச்னைகள் ஏற்படாதா என்று செளவிடம் வினவப்பட்டது. ஏதாவது எதிர்பார்ப்புடன் செய்தியாளர் கவுன்சிலராக நியமிக்கப்படுகிறாரா என்றும் கேட்கப்பட்டது.

“எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை. அவர் இதழியல் நெறிகளை அறிந்திருப்பார். அதேபோல் கவுன்சிலர்களுக்கென்று சில நெறிமுறைகள் உள்ளன. அவற்றையும் அவர் பின்பற்ற வேண்டும்”, என்று செள கூறினார்.

குணாளன், ஆண்டுக்கூட்டத்தில் ராமசாமிக்கும் டிஏபி தலைவர் கர்பாலுக்குமிடையில் வார்லார்ட்-கோட்பாதர் சர்ச்சைமீது கருத்துரைக்க விரும்பிய பல பேராளர்களில் ஒருவராவார்.

ராமசாமிக்கு ஆதரவாக பேச நினைத்த அவரைப் பேசவிடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து விட்டனர்.

கவுன்சிலராக நியமிக்கப்பட்ட குணாளன், புதிய வேலையில் முழுக் கவனம் செலுத்த செய்தியாளர் பணிக்கு முழுக்குப் போடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

ஒரு செய்தியாளர் என்ற முறையில் எப்போதும் “கவனத்துடன்” செயல்பட்டு வந்திருப்பதால் இரண்டு பணிகளையும் செய்வதில் பிரச்னை ஏதும் இராது என்றே அவர் கருதுகிறார்.

TAGS: