ச்சாஆவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கருணை நிதி வழங்கவேண்டும்

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்.

இவ்வாண்டு தொடக்கத்தில், ஜொகூர் மாநிலத்தில் தெனாங் இடைத்தேர்தலின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெக்கோ பகுதிவாழ் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜனநாயக செயல்கட்சி பிரமுகர்கள் சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்று அவர்களைக் கண்டனர். அப்போது மக்களில் பலர், வெள்ளம் வடிந்ததும் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ‘கருணை நிதி’ கிடைக்கவில்லையென அவர்களிடம் முறையிட்டனர்.

உதவி பெறாத 420 பேர் அப்போது தங்கள் பெயர்களைப் பதிந்துகொண்டனர். பலருக்கு உதவி நிதி கிடைக்கவில்லை என்றும் அண்டை வீடுகளில் உள்ள மலாய் குடும்பங்கள் மட்டுமே உதவி பெற்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் லாபீஸ் மாவட்ட அதிகாரிகள் தங்களுக்கு சம்பந்தப்பட்ட பாரங்களைக் கொடுக்கவில்லை என்றும், தாங்கள் வெள்ள அகதிகள் என்பதை அங்கீகரிக்க மறுத்தனர் என்றும் அவர்கள் கூறினர்.

உதவி நல்கும் விசயத்தில் இனம், சமய பேதம் இருக்கக்கூடாது என்று ஜனநாயக செயல் கட்சியினர், லாபிஸ் மாவட்ட மன்றத்திடம் அறிவுறுத்தினர். புயலும் வெள்ளமும் ஆள் பார்த்து பாய்வதில்ல என அவர்கள் கருத்துரைத்தனர்.

எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் தமது தொகுதிக்கு வந்திருப்பதை உணர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த லாபீஸ் நாடாள்மன்ற உறுப்பினர் திரு. ச்சுவா தீ யொங், எதிர்க்கட்சியினர் “பிரச்னைவாதிகள்” என்றும், கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் அவர்கள் மக்களை கைவிட்டுவிட்டனர் என்றும், அரசாங்கத்துக்கு எதிராக மக்களை துண்டிவிடுகின்றனர் என்றும் கூறினார்.

மக்களை யார் கைவிட்டது என ஜனநாயக செயல்கட்சியைச் சார்ந்த நாங்கள்  சுவாவை கேட்கிறோம்! 2008-ம் தேர்தலில், ம.சீ.ச பெக்கோ சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியது. ஆனால் இதுவரை பெக்கோ வட்டாரத்தில் ஒரு சேவை மன்றம்கூட திறக்கப்படவில்லை. ச்சாஆ மக்கள் ச்சுவாவை அல்லது பெக்கோ சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க வேண்டுமாயின் லாபிஸ் செல்லவேண்டியுள்ளது. இப்போது சொல்லுங்கள் மக்களை கைவிட்டது ம.சீ.சாவா? எதிர்க்கட்சியா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நிதி வழங்கும்படி தேசிய வெள்ள நிவாரண தலைமையகத்துக்கு மசோதா அனுப்பியுள்ளோம். இக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால், ஏமாற்றமடைந்த மக்கள் லாபீஸ் மாவட்ட மன்றத்தின் முன்னால் மறியல் செய்வர். ஒரே மலேசியா கோட்பாடு பொருள்ளுதாக இருக்க வேண்டும். வெறும் சுலோகமாக மட்டுமே இருக்கக்கூடாது.

TAGS: