வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. அதனை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பேரணிக்கு எதிராக சமூக ஊடக இயக்கத்தை போலீசார் தொடங்கியுள்ளனர்.
போலீஸ் படையின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்திலும் டிவிட்டர் பக்கத்திலும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த லண்டன் கலவரங்கள் உட்பட கடந்த கால கலவரங்கள் பற்றிய படங்களும் வீடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
லண்டன் கலவரங்கள் பற்றிய ஏபிசி தொலைக்காட்சி செய்தி அறிக்கையும் அதில் இடம் பெற்றுள்ளது. அதற்கு எழுதப்பட்டுள்ள வாசகம் இது தான்: “இதுதான் உங்களுக்கு வேண்டுமா? வெளிநாடுகளில் அமைதியான கூட்டங்கள் கலவரங்களாக மாறியுள்ளன. நாம் சுதந்திரத்தையும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான உரிமையையும் தொடர்ந்து கோரினால் அவை நமக்குப் பாடமாக இருக்க வேண்டும்.”
இரண்டு நிமிடங்களுக்கு ஒடும் அந்த வீடியோ ஒளிப்பதிவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணாடிகளை நொறுக்கும் காட்சியும் கட்டிடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீயிடும் காட்சியும் லண்டன் தெருக்களில் போலீசாருடன் கலகக்காரர்கள் மோதும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.
நெருப்புப் பற்றிக் கொண்டுள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து மாது ஒருவர் குதித்து மீட்பு ஊழியர்களில் கரங்களில் விழுவதும் அந்த வீடியோவில் காட்டப்படுகிறது.
போலீஸ் ரோந்து வாகனம் ஒன்றின் மீது மக்கள் ஏறுவதை ஒரு படம் காட்டியது. கலகக்காரர்கள் பெரிய வேன் ஒன்றை கவிழ்ப்பதை இன்னொரு படம் காட்டியது. ஆனால் அந்தப் படங்களின் ஆதாரம் தெளிவாகத் தெரியவில்லை.
அந்த வீடியோவில் திட்டமிடப்பட்டுள்ள பேரணி பற்றி “கடைக்காரர்” ஒருவரும் “பாதுகாவலர்” ஒருவரும் தெரிவிக்கும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்கும் பேட்டிகளையும் போலீசார் இணைத்துள்ளனர்.
“முடியுமானால் அந்த 901 பேரணி வேண்டாம். காரணம் அது அனைவருக்கும் இடையூறாக இருக்கும்,” என ‘திரு கென்னி’ என அடையாளம் கூறப்பட்ட கடைக்காரர் அந்த ஒரு நிமிட வீடியோவில் கூறியிருக்கிறார்.
பெர்சே பேரணியும் ரிபார்மசி இயக்கமும் தமது வர்த்தகத்தைப் பாதித்து விட்டதாக அவர் அதில் கூறிக் கொண்டுள்ளார்.
வீடியோ பதிவுகள் “நன்றாக இல்லை”
“அந்த சட்டவிரோத கூட்டம் தேவையற்றது. மற்றவர்களுக்குச் சிரமத்தை அளிக்கிறது. கால விரயம். நமக்கு உதவாத ஒருவருக்கு நாம் ஏன் உதவ வேண்டும்?” என பெயர் குறிப்பிடப்படாத ‘பாதுகாவலர்’ ஒருவர் இன்னொரு வீடியோ பதிவில் வினவுகிறார்.
“அவர்கள் அன்வாருக்கு உதவினால் அவர்களுக்கு சிரமம் ஏற்படும் போது அன்வார் திரும்ப உதவுவாரா? அது நிச்சயமில்லை. ஆகவே அவர்கள் எங்களுக்குச் சிரமத்தைக் கொடுக்காமல் இருப்பது நல்லது,” என அவர் மேலும் சொன்னார்.
தஞ்சோங் மாலிமில் உள்ள யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idrisல் ஜனவரி முதல் தேதி நிகழ்ந்த மாணவர் ஆர்ப்ப்பாட்டம் பற்றிய போலீஸ் ஒளிப்பதிவுகளுடன் இந்த இரண்டு வீடியோக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவை போலீசாரின் அதிகாரத்துவ யூ டியூப் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் மணி 2.55 வரையில் அந்த வீடியோக்களை முறையே 244 பேரும் 666 பேரும் பார்த்துள்ளனர்.
அந்த யூ டியூப் வீடியோக்கள் மீது யாரும் கருத்துரைக்க அனுமதிக்கப்படவில்லை. என்றாலும் அவற்றைப் பார்த்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் அவை “நன்றாக இல்லை” எனக் கூறினர்.
என்றாலும் முகநூலில் அவை குறித்த கருத்துரைத்த அனைவரும் போலீஸ் செய்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.
அன்வார் மீதான இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் அடுத்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்துக்கு வெளியில் 100,000 ஆதரவாளர்களை இறக்கப் போவதாக பிகேஆர் சூளுரைத்துள்ளது.