சிங்கப்பூர் அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது

சிங்கப்பூரில் அந்நாட்டு தலைமையமைச்சர் லீ சியன் லூங்-கால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புதிய சம்பள வீதங்களின் அடிப்படையில் அவர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்து அமைச்சர்களின் சம்பளங்களில் இந்தப் பெரிய வெட்டு அமலுக்கு வருகிறது.

அந்தக் குழு நாட்டின் தலைமையமைச்சர் லீ சியன் லூங் அவர்களின் சம்பளம் 36 சதவீதம் குறைக்கபட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன்படி அவரது ஆண்டுச் சம்பளம் இனி 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைகிறது.

இருந்த போதிலும் அவர்தான் உலகிலேயே தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களில் அதிக ஊதியம் பெரும் தலைவராக இருப்பார். அவரது சம்பளம் அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் சம்பளத்தைவிட நான்கு மடங்குக்கும் கூடுதலானது. பராக் ஒபாமா ஆண்டொன்றுக்கு நான்கு இலட்சம் டாலர்களே சம்பளமாகப் பெறுகிறார்.

சிங்கப்பூர் அரசால் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளின் படி, அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் தலைமையமைச்சரைப் போலவே 36 சதவீதம் குறையும். அவர்களின் ஆண்டுச் சம்பளம் இனி எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்களாக இருக்கும்.