நீதிமன்றத்துக்கு வெளியில் 901 பேரணிக்கு போலீஸ் அனுமதி

திங்கள்கிழமை டூத்தா நீதிமன்ற வளாகக் கார் நிறுத்துமிடத்தில் பக்காத்தான் ரக்யாட் “901அன்வார் விடுதலைப் பேரணி” நடத்த போலீசார் அனுமதி அளிக்க இணங்கியுள்ளனர்.

இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் இரு தரப்பினரும் ஒரு மணி நேரம் நடத்திய பேச்சுகளைத் தொடர்ந்து இந்த இணக்கம் காணப்பட்டது.

போலீசாருடனான பேச்சுகளில் பிகேஆர் பேராளர்களுக்குத் தலைமையேற்றிருந்த கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி(வலம் இருப்பவர்) பிற்பகல் கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் இதை அறிவிக்க நினைத்திருந்தார். ஆனால்,அவரை முந்திக் கொண்டார் பேச்சுகளில் கலந்துகொண்ட பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டார். தம் டிவிட்டர் பக்கத்தில் அவர் இத்தகவலைப் போட்டு உடைத்துப் விட்டார்.

போலீஸ் தலைமையகத்தைவிட்டு வெளியேறு முன்னர் ஷம்சுல், மலேசியாகினியிடம் அத்தகவலை உறுதிப்படுத்தினார்.

அது உண்மைதான் என்று கேஎல் போலீஸ் தலைவர் முகம்மட் சாலேயும் உறுதிப்படுத்தினார்.

அஸ்மினைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“பேரணி அமைதியாக நடப்பதையும்  பொது ஒழுங்கைக் கெடுக்காமலிருப்பதையும் ஏற்பாட்டாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்”, என்றார்.

புண்ணகையுடன் காணப்பட்ட அஸ்மின் பேரணிக்கு அனுமதியளித்த போலீசுக்கு நன்றி தெரிவித்தார்.

“பிற்பகல் 3.30க்கு  நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் மற்ற விவரங்களைத் தெரிவிப்போம்…..இப்போது தெரிவித்துவிட்டால் செய்தியாளர் கூட்டத்துக்கு யாரும் வரமாட்டீர்கள்”, என்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையக வாசலில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இது இப்படி இருக்க, அதே நாளில் மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா, கூட்டரசு பிரதேச பள்ளிவாசல் வளாகத்தில் கூட்டம் நடத்தவும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

அப்பள்ளிவாசல், பக்காத்தான் 100,000 பேரைத் திரட்டி பேரணி நடத்தத் திட்டமிட்டிருக்கும் டூத்தா  நீதிமன்ற வளாகத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில்  உள்ளது.

தங்ளுடை ஒன்றுகூடலுக்கு அனுமதி தேவையில்லை என்று பெர்காசா துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் பக்கார் (வலம்) கூறினார்.

பெர்காசா, பெகிடா, பெர்மாஸ் போன்ற வேறு சில மலாய் என்ஜிஓ-களுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திங்கள்கிழமைவரை அப்பள்ளிவாசலில் தொழுகைகளுக்கும் செராமாக்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளது என்றாரவர்.

“பள்ளிவாசல் வளாகத்துக்குள்ளேயே இருக்க ஒப்புக்கொண்டோம். பள்ளிவாசலைவிட்டு வெளியில் வர மாட்டோம்.”

பள்ளிவாசலில் தங்கள் நடவடிக்கைகளுக்கு மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்)யிடமிருந்தும் பள்ளி நிர்வாகத்திடமிருந்தும் அனுமதி பெற்றிருப்பதாகவும் ரஹ்மான் தெரிவித்தார்.

பக்காத்தான் ஆதரவாளர்கள் தொழுகை நடத்த பள்ளிவாசலுக்குள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று வினவியதற்கு, அதை போலீசார் கவனித்துக்கொள்வார்கள் என்றாரவர்.

“எங்கள் உறுப்பினர்கள் சட்டத்தை மீற மாட்டார்கள். எல்லாருமே அடையாள அட்டை அணிந்திருப்பார்கள்….நாங்கள் சினமூட்டும் நடவடிக்கை எதிலும் ஈடுபட மாட்டோம்”, என்றவர் வலியுறுத்துனார்.

இதனிடையே,பெர்காசா ஆதரவாளர்கள் பள்ளிவாசலில் கூடுவதை அஸ்மின் அறிந்திருக்கவில்லை.

“அன்று யாரும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை போலீசிடமே விட்டு விடுகிறேன்”, என்றவர் குறிப்பிட்டார்.

TAGS: