கெராக்கானும் மசீசவும் முதல்வர் பதவியைத் தாரைவார்த்துக் கொடுக்கும்

அம்னோ, பினாங்கு முதலமைச்சர் பதவிக்குக் கோரிக்கை விடுத்தால் கெராக்கானும் மசீசவும் அதை வெள்ளித்தட்டில் வைத்துத் தூக்கிக் கொடுத்துவிடும் என்று டிஏபி குத்தலாகக் கூறியுள்ளது.

அம்னோவின் நோக்கம் தெளிவானது என்று கூறிய டிஏபி இளைஞர் உதவித் தலைவர் இங் வை ஏய்க், என்னதான் கூறி மறுத்தாலும் முதல்வர் பதவிமீது அம்னோவுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு என்றார்.

எல்லா மாநிலங்களிலும் முதலமைச்சர், மந்திரி புசார் பதவிகள் தன்வசம் இருக்க வேண்டும் என அது விரும்புகிறது. ஒருமுறை அப்பதவி தன்வசம் வந்ததும் அதை சக பிஎன் உறுப்புக்கட்சிகளுக்கு அது திருப்பிக் கொடுக்காது என்று இங் குறிப்பிட்டார்.

“சாபா ஒரு நல்ல எடுத்துக்காட்டு.  ‘சுழல்முறையில்  முதலமைச்சர் பதவி வகிக்கப்படும்’ என்றனர். ஆனால், அம்னோ ஆட்சிக்கு வந்த பின்னர், ஆட்சி வேறு எந்தக் கட்சிக்கும் மாறவில்லை”, என்று முதலமைச்சர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளருமான இங் கூறினார்.

நேற்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவில், சைனி ஹசான் தம் பத்தியில் குறிப்பிட்ட ஒரு விசயம் குறித்து இங் கருத்துரைத்தார்.

முதலமைச்சர் பதவியை அம்னோவுக்குக் கொடுப்பதாக உறுதி கூறப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் பினாங்கைக் கைப்பற்ற முடியும் என்று சைனி ஹசான் கூறியிருந்தார்.

பினாங்கு முதல்வர் பதவி சுழல்முறையில் அமைந்த ஒரு பதவி என்றும் அது இப்போது அம்னோவிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் மாநிலச் சட்டமன்றத்தில் பிஎன்னுக்கான இடங்கள் அத்தனையையும் வென்றது அம்னோ மட்டுமே என்பதையும் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் இங், பினாங்கு முதல்வர் பதவி சுழல்முறையில் அமைந்த ஒரு பதவி என்று கூறப்படுவதை மறுத்தார். கெராக்கான் அப்பதவியை வகித்து வந்துள்ளது. அம்னோ வேட்பாளர் எவரும் அப்பதவியில் இருந்ததில்லை.

அக் கட்டுரை, முதலமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ள அம்னோ விரும்புவதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது என்று கூறிய இங், கெராக்கான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காது என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலில் வென்று மக்களுக்குச் சேவை செய்வது அம்னோவின் நோக்கமல்ல. எவ்வகையிலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே அதன் குறிக்கோள் என்றாரவர்.

“எதிர்ப்பு என்று வந்துவிட்டால் இனம், சமயத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு அவர்களைத் தவிர மற்ற எல்லாரையும் குறை சொல்வார்கள். தங்கள் நோக்கம் நிறைவேற தங்களின் பிஎன் சகாக்களையும் அவமதிக்க தயங்க மாட்டார்கள்”.

மலேசியா அண்டைநாடுகளுடன் போட்டியிட முடியாமல் தோற்றுப்போவதற்கு நிர்வாகச் சீர்கேடுதான் காரணம் என்று இங் கூறினார்.

பிஎன் 54 ஆண்டுகளில் செய்ய முடியாததை பக்காத்தான் ரக்யாட் மூன்றாண்டுகளில் செய்து முடித்திருப்பதிலிருந்து பிஎன்னுக்கு ஆளும் தகுதி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்றவர் சொன்னார்.

முதலமைச்சர் விவகாரத்தில் கெராக்கானும் மசீசவும் மெளனமாக இருந்தால் அது அவை  “அம்னோவின் பணியாள்கள்” என்பதைத்தான் நிரூபிக்கும் என்று இங் குறிப்பிட்டார்.

அவ்விரண்டும் பிஎன்னில் சமப்பங்காளித்துவம் கொண்டிருப்பதாகக் கூறிக்கொள்கின்றன ஆனால், அம்னோ மலாய்க்காரர்-அல்லாதாரைக் குறைகூறினால் இரண்டும் வாய்மூடி மெளனமாக இருக்கும் என்றாரவர்.

பினாங்கு மக்கள் அம்னோவியும் மற்ற பிஎன் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும் என்று இங் கேட்டுக்கொண்டார். அம்னோ, “அதிகாரப் பேராசை கொண்ட கட்சி” என்று வருணித்த அவர் மக்களாட்சியை அது மதிப்பதில்லை என்றார்.

“தங்கள் தலைவர்கள் வளமாக இருக்க நாட்டையே அழிக்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், மலேசியாவைச் சூறையாடிச் சூறையாடி கடன்கார நாடாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்” என்றவர் வலியுறுத்தினார்.

TAGS: