“ஹசான் வெறுப்புணர்வைத் தூண்டுகிறார்” என கத்தோலிக்க ஆயர் அஞ்சுகிறார்

இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, “தேவாலயத் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நிகழ்ந்த நண்பகல் விருந்துக் கூட்டங்களைக் கேலிக் கூத்தாக்கும் வகையில் முஸ்லிம்களை கிறிஸ்துவர்கள் மதம் மாற்றம் செய்வதாக பூச்சாண்டி காட்டுகின்றார்”, என கத்தோலிக்க ஆயரான டாக்டர் பால் தான் சி இங் கூறியிருக்கிறார்.

“இது மிகவும் வினோதமானது என்றுதான் நான் கூறுவேன். பிரதமருடன் கிறிஸ்துவ தலைவர்கள் மிகழ்ச்சி நிறைந்த கூட்டத்திலிருந்து வெளியேறும் வேளையில் சமய அறிவு மிக்கவராக தம்மைக் காட்டிக் கொள்ளும் ஒருவர், ஒரு சிலருடைய கற்பனையில் மட்டுமே இருக்கும் மருட்டலைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்.”

முஸ்லிம்களை கிறிஸ்துவர்கள் மதம் மாற்றம் செய்வதாக ஹசான் கூறிக் கொண்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவல்கள் பற்றி டாக்டர் பால் தான் மலேசியாகினியிடம் கருத்துரைத்தார்.

“வழக்கம் போல ஹசான் தாம் சொல்வதற்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.  முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதாக தாம் கூறிக் கொள்ளும் கிறிஸ்துவக் குழுக்களுக்கு எதிராக அவர் கூறும் வெறும் குற்றச்சாட்டுக்களே அவை.”

ஹசான் தொடர்ந்து சுமத்தி வரும் அந்தக் குற்றச்சாட்டுக்களின் நோக்கம் முஸ்லிம்களுடைய பார்வையில் கிறிஸ்துவர்களைத் வஞ்சகர்களாகவும் சதி செய்கின்றவர்களாகக் காட்டுவதுதான் என மலேசியா சிங்கப்பூர், புருணை ஆகியவற்றுக்கான கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவருமான டாக்டர் பால் தான் சொன்னார்.

“ஒரு பக்கத்தில் கிறிஸ்துவர்களுடைய கவலையைப் போக்குவதற்காக பிரதமர் அமைச்சர்களுடன் கிறிஸ்துவத் தலைவர்களைச் சந்திக்கிறார். இன்னொரு பக்கத்தில் சமய அறிவாளியாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ஒருவர் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையிலான நல்ல உறவுகளின் அடிப்படையையே வேரறுக்கும் அறிக்கைகளை வெளியிடுகிறார்,” என ஆயர் டாக்டர் பால் தான் கூறினார்.