திங்கள்கிழமை, “குற்றவாளி அல்ல” என்று தீர்ப்பளிக்கப்பட்டால் என்னவாகும்?

[கருத்துரை: எம்.கிருஷ்ணமூர்த்தி]

திங்கள்கிழமை அளிக்கப்படும் தீர்ப்பு “குற்றவாளி அல்ல” என்றிருந்தால்? நல்ல நினைப்புத்தான். அன்வார் அனுதாபிகள் அப்படித்தான் நினைப்பார்கள். மற்றவர்கள், அப்படியெல்லாம் கனவு காணாதீர் என்பார்கள்.

நீதி மாளிகையிலிருந்து “நாங்கள்தான் சொன்னோமே நீதித்துறை சுயேச்சையாக இயங்குகிறது என்று, கேட்டீர்களா”, என்ற எதிரொலிகள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

‘குற்றவாளி அல்ல’-தீர்ப்பு வந்தால், பத்திரிகைக் கருத்துகள் எப்படி இருக்கும்….. சற்று கற்பனை செய்து பாருங்களேன். அரசாங்கமும் நீதித்துறையும் நியாயம் தவறியதில்லை, என்றும் நியாயமாக நடந்துகொண்டிருக்கின்றன என்று புகழ்ந்து தள்ளிவிடுவார்கள்.

‘குற்றவாளி அல்ல’-தீர்ப்பு அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அன்வார் ஒரு தியாகியாக நினைக்கப்பட்டு வந்த நிலை மாறும்.அனுதாப அலையும் மறைந்து போகும்.

அதனால், பாதிக்கப்படுவது யார்; பக்காத்தான் ரக்யாட்டா, பிஎன்னா? அரசாங்கத்துக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தித் தந்த சில ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக இழந்துள்ள ஆதரவை பிஎன் திரும்பப் பெறுமா? எல்லாமே, தீர்ப்பை வாக்காளர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துள்ளது.

தீர்ப்பு, மலேசியா சுதந்திரமாக செயல்படும் நீதித்துறையைக் கொண்டிருக்கிறது எனப் பெருமைப்பட வைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே மலேசியர் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தீர்ப்பு ‘குற்றவாளி அல்ல’ என்றிருந்தால் கூடவே சில நிபந்தனைகளும் விதிக்கப்படலாம்.ஒரு வழக்குரைஞர் கூறுகிறார், அன்வார் மீதான வழக்கு குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுக்கப்படாமலேயே தள்ளுபடி செய்யப்படலாம் என்று.அதாவது அவர் விடுவிக்கப்படுவார்.ஆனால், கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தால் அவர்மீது மீண்டும் வழக்கு தொடரப்படும் என்பதே இதன் பொருள்.

“யார் கண்டது, இன்னொரு குதத்தில் விந்து கண்டுபிடிக்கப்பட்டு, புது வழக்கு ஒன்றுகூட தொடுக்கப்படலாம்”, என்று குத்தலாக அவர் குறிப்பிட்டார்.

‘குற்றவாளி அல்ல’-தீர்ப்பைப் பார்த்துக்கொண்டு அரசுத் தரப்பு சும்மா இருந்துவிடாது. மேல்முறையீடு செய்வார்கள்.இன்னொரு நீண்ட போராட்டம் தொடரும்.

அன்வாரின் வழக்குரைஞர்கள், தீர்ப்பு தங்களுக்குச்  சாதகமாக இருந்தால், மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை-ஈராண்டுகளாக அவ்வழக்குடன் கட்டிப்புரண்டவர்கள் அல்லவா.

கடுமையாக ஆய்வுகள் செய்து தாங்கள் முன்வைத்த வாதங்களின் பயனாக அன்வார் விடுவிக்கப்பட்டதாக அவர்கள் கூறிக்கொள்வார்கள்.

வழக்கின்போது நீதிமன்றம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை எனப் பலமுறை எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் குறிப்பிட்டது உண்டு. ஆனால், அன்வார் உண்மைகளையும் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு தெளிவான தீர்ப்பு வழங்கு வழங்கப்படும் என்றே நம்புகிறார்.

தீர்ப்பு, எதிர்வரும் பொதுத்தேர்தலில் பக்காத்தானுக்கும் பிஎன்னுக்கும் கிடைக்கக்கூடிய வாக்குகளையே மாற்றி அமைக்கும் அளவுக்கு முக்கியமானது.

‘குற்றவாளி அல்ல’ என்று தீர்ப்பளிக்கப்படுமானால், தீர்ப்பு முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என இதுவரை கூறப்பட்டுவந்த அத்தனையும் நம்பத்தக்க கூற்று அல்ல என்றாகிவிடும்.

“அன்வார் வெற்றி பெற்றால், வழக்கு நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டது என்று கூறப்படும் வதந்திகள் அனைத்தும் பொய்யாகி விடும்”, என்றார் சட்ட விரிவுரையாளர் ஒருவர்.

அன்வாரின் முதல் குதப்புணர்ர்ச்சி வழக்கில் அவர் சிறையிடப்பட்டது மாற்றரசுக் கூட்டணிக்கு வலுவூட்டியது என்பதையும் 2008 பொதுத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதையும் மறந்துவிடக்கூடாது.

இப்போது அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அதன் விளைவாக அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தானின் வெற்றி வாய்ப்புகள் பெருகும் என்றே மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் நம்புகிறார்கள்.

ஆக, எல்லாமே தீர்ப்பைப் பொறுத்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி முகம்மட் ஸபிடின் முகம்மட் டியா நியாயமாக நடந்துகொண்டதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடத்தான் வேண்டும். 2011, மார்ச் 8-இல், அன்வார் போலீஸ் லாக்-அப்பில் இருந்தபோது பயன்படுத்தப்பட்ட பொருள்களிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ-யை-தவறான முறையில் பெறப்பட்டது என்றுகூறி- ஒரு சான்றாக ஏற்க அவர் மறுத்தார்.

இது இந்த நீண்ட வழக்கில் அன்வாருக்குக் கிடைத்த ஒரு சிறிய, அரிய வெற்றி.

அதே ஸபிடின், திங்கள்கிழமை ‘குற்றவாளி’, ‘குற்றவாளி அல்ல’ என்று தீர்ப்புக் கூறப்போகிறார். வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்களைச் சீர்தூக்கி ஆராய்ந்து அவர் சரியான தீர்ப்பை வழங்குவார்.

===============================================================================

எம்.கிருஷ்ணமூர்த்தி: சுதந்திரமாக செயல்படும் ஒரு செய்தியாளர். சிஎன்என், பிபிசி இன்னும் பல வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளுக்கு செய்தி ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார். முன்பு த ஸ்டார், நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேடுகளில் பணியாற்றியுள்ளார். நான்கு நூல்களை வெளியிட்டிருக்கிறார்.