தீர்ப்பு வரலாற்றை மாற்ற முடியாது என்கிறார் அன்வார்

வரும் திங்கட்கிழமை குதப்புணர்ச்சி வழக்கு IIல் தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஜெயிலுக்குப் போக அன்வார் இப்ராஹிம் தயாராக இருக்கிறார்.

தமக்கு எதிரான முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் நிகழ்ந்ததைப் போன்றே வரலாறு இருக்கும் என அந்த பக்காத்தான் ராக்யாட் தலைவர் நம்புகிறார்.

ஆனால் தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மேல் முறையீட்டுக்காக தமக்கு ஜாமீன் வழங்கப்படுமா என்பது அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.

அன்வார் நேற்றிரவு பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங்-கில் உள்ள பல நோக்கு மண்டபத்தில் கூடியிருந்த 800 பேரிடம் பேசினார்.

“ஒவ்வொருவருக்கும் ஜாமீன் கிடைக்கும் ஆனால் அன்வார் இப்ராஹிம் என்ற இந்த பரிதாபமான மனிதனுக்கு அது கிடைக்காது. கடந்த முறை 1998ம் ஆண்டு எனக்கு ஜாமீன் கொடுக்கப்படவில்லை.”

என்றாலும் ஜாமீன் பிரச்னை என்னுடைய குடும்பத்தை மட்டுமே பாதிக்கும். பொதுவாக மலேசியர்களை அல்ல என அவர் வலியுறுத்தினார்.

“மலேசியர்களைப் பொறுத்த வரையில் முழுக்க முழுக்க அநீதிய நிறைந்துள்ளதை அந்தத் தீர்ப்பு மீண்டும் மலேசியர்களுக்கு நினைவுபடுத்தும். அரசாங்கம் அப்பட்டமாக ஊழல் மலிந்தது. நாம் அதனை மாற்ற வேண்டும்,” என அவர் உரத்த குரலில் கூறினார்.

“அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர்கள் தாங்கள் விரும்புவதைச் செய்யலாம். ஆனால் வரலாற்றை மாற்ற முடியாது.”

“நாம் வரலாற்றில் சரியான பக்கத்தில் இருக்கிறோம். நாம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திரம், நீதி, நல்வாழ்வு கிடைக்க நாம் போராடுகிறோம்,” என அன்வார் சொன்ன போது பலத்த கைதட்டல் எழுந்தது.

அன்வார் ஜனவரி 9ம் தேதிக்குப் பின்னர் இந்தியாவுக்கும் துருக்கிக்கும் செல்கிறார்

நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று இரவு அந்த 65 வயது எதிர்த்தரப்பு அரசியல்வாதி இந்தியாவில் உள்ள மும்பாய்க்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

மக்களுக்கு ஆதரவான ஜனநாயகத் திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி, அன்வாரை அழைத்துள்ளார்.

ஜனவரி 12ம் தேதி அன்வார் துருக்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டுப் பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன் விடுத்த அழைப்பை ஏற்றுச் செல்லும் அவர் அங்கு உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 14ம் நாள் அலோர் ஸ்டாரில் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்படும்.

“தீர்ப்பு எப்படி இருந்தாலும் நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும்,” என்றார் அவர்.

தாம் நல்லதையும் கெட்டதையும் அனுபவித்துள்ளதாக தமது உரை முழுவதும் அன்வார் குறிப்பிட்டார்.

நாட்டுக்கான போராட்டத்தைத் தொடருவதற்கு அவை தமக்கு நம்பிக்கையையும் துணைச்சலையும் கொடுத்துள்ளன என்றார் அவர்.

“சுதந்திரம், நீதி, கௌரவம், ஊழலுக்கு எதிர்ப்பு ஆகியவற்றில் நீங்கள் நம்பிக்கை வைத்ததும் நாட்டுக்கான உங்கள் போராட்டத்தை தொடருவதற்கான ஊக்கமும் துணிச்சலும் கிடைக்கும்.”

பல்கலைக்கழக நாட்களிலிருந்து தமக்கு ஏற்றமும் இறக்கமும் நிகழ்ந்துள்ளதை அன்வார் குறிப்பிட்டார்.

கடந்த முறை சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தாம் மிகவும் உறுதியான நம்பிக்கையுடன் வெளியில்  வந்ததாகவும் அவர் சொன்னார்.

“நான் பல்கலைக்கழகத்திலிருந்து கமுந்திங் சிறைக்கு சென்றேன். அடுத்து சுங்கை பூலோ சிறைக்கு போனேன்.  ஆகவே அடுத்து நான் எங்கே நிற்க வேண்டும்?”

அதற்கு ஒருவர் ‘புத்ராஜெயா’ எனப் பதில் அளித்த போது அன்வார் புன்முறுவல் பூத்தார்.