வெற்றி அல்லது வீர மரணம்: கடாஃபி ஆவேசம்

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கர்ணல் கடாஃபியின் குடியிருப்பு வளாகம் நேற்று கிளர்ச்சிக்காரர்கள் வசம் வந்தது.

இதனிடையே இரகசிய இடம் ஒன்றிலிருந்து நேற்று அறிக்கை விடுத்த கர்ணல் கடாஃபி, “வெற்றி அல்லது வீர மரணம்” என்று தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள கடாபி ஆதரவாளர்கள் நேற்று மீண்டும் கிளர்ச்சிக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

கடாஃபியின் குரல் பதிவு செய்யப்பட்ட வானொலி சிற்றுரை ஒன்றை லிபிய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் ‘நேட்டோ’வுக்கு எதிரான இப்போரில் நான் வெற்றி அடைவேன். அல்லது வீர மரணம் எய்துவேன். எனது குடியிருப்பு வளாகம், ‘நேட்டோ’ இதுவரை 64 முறை நடத்திய குண்டுவீச்சில் ஏற்கனவே அழிந்து விட்டது. அதனால், போர் தந்திர நடவடிக்கையாக நான் வளாகத்தை விட்டு வெளியேறிவிட்டேன். அனைத்து லிபிய மக்களும் திரிபோலியில் கூடி கிளர்ச்சிக்காரர்களை விரட்ட வேண்டும். நகரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு கடாபி தெரிவித்தார்.

கடாஃபி எங்கிருக்கிறார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், அவர் திரிபோலியின் ஏதாவது ஒரு பகுதியில் பூமிக்கடியில் பதுங்கியிருக்கலாம் என்று கிளர்ச்சிக்காரர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனால் அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதையடுத்து ‘பாப் அல் அஜீசியாவில்’ இருந்த கிளர்ச்சிக்காரர்கள் மீது கடாபி ஆதரவாளர்கள் நேற்று கடும் தாக்குதல் தொடுத்தனர்.