மாதிரிகளை சோதனை செய்வதற்கு இரசாயனத்துறை பயன்படுத்துகின்ற ஆய்வுக் கூடம் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதா என்னும் சந்தேகத்தை இன்று அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கில் பிரதிவாதித் தரப்பு ஏற்படுத்தியது.
அமெரிக்க கிரிமினல் குற்றவியல் ஆய்வுக்கூட இயக்குநர்கள் சங்கத்தின் (ASCLD) கீழ் தேவைப்படும் ISO 17025 அனைத்துலக அங்கீகாரத் தரத்தை அது பெறவில்லை என்று அது வெளிப்படுத்தியது.
இரசாயனத் துறை ஆய்வுக் கூடம் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் சங்கர நாயர் சொன்னார். அந்தத் திட்டம் என்பது சோதனைக் காலமாகும்.
இரசாயனத்துறை தலைமை இயக்குநர் லிம் கொங் பூனுக்கு அமெரிக்க கிரிமினல் குற்றவியல் ஆய்வுக்கூட இயக்குநர்கள் சங்கம் எழுதிய கடிதத்தின் பிரதி ஒன்றை அவர் நிருபர்களுக்குக் காட்டினார்.
2005ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதிக்கும் 2010ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதிக்கும் இடையில் அந்தத் தடயவியல் ஆய்வுக்கூடம் தலைமைத்துவப் பயிற்சிக்கான அங்கீகாரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள தகவலை அந்தக் கடிதம் உறுதிப்படுத்தியது.
“அதற்குத் தேவைப்படும் ISO 17025 அங்கீகாரம் இல்லை. அத்துடன் 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதிக்குப் பின்னர் இரண்டு நீட்டிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் இவ்வாண்டு அக்டோபர் மாதம் நிறைவடைகிறது.”
“2008ம் ஆண்டு சைபுலின் (முகமட் சைபுல் புஹாரி அஸ்லான்) மாதிரி மீது சோதனை நடத்தியபோது அதற்கு அங்கீகாரம் இல்லை என்பதை அது காட்டுகிறது.”
இன்றைய விசாரணையின்போது ராம் கர்பால் சிங், ஆய்வுக்கூடத்தின் தகுதியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க அமெரிக்க அமைப்பு ஒப்புக் கொள்ளும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தேதியிடப்பட்ட கடிதத்தை டாக்டர் பிரியான் மக்டொனால்டிடம் காண்பித்த போது அந்த விஷயம் வெளி வந்தது.
மக்டொனால்ட் அந்தக் கடிதத்தைத் தயாரித்தவர் அல்லது பெறுநர் அல்ல என்பதால் அது அறிமுகம் செய்யப்படுவதற்கு சொலிஸிட்டர் ஜெனரல் 2 முகமட் யூசோப் ஜைனல் அபிடின் ஆட்சேபித்தார்.
அதனை ஆதாரமாக அல்லாமல் முதல் அடையாளப் பத்திரமாக குறித்துக் கொள்ளுமாறு ராம் கர்பால் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.அந்தக் கடிதத்தின் பெறுநர் லிம் என்பதால் தாங்கள் அது குறித்து சாட்சியமளிப்பதற்கு அவரை அழைக்கப் போவதாக சங்கரா பின்னர் கூறினார்.
அன்வாரின் முதலாவதுகுதப்புணர்ச்சி வழக்கு ஒன்றில் லிம் சாட்சியமளித்த ரசாயன நிபுணர் ஆவார்.