தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் அப்துல் அசிஸ் யுசோப் இரு முறை வாக்களிப்பைத் தவிர்ப்பதற்கு கைவிரல் ரேகை பதிவு (பையோமெட்) முறையைவிட அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துவதால் பிரச்னைகள் குறையும் என்பதை இன்று ஒப்புக்கொண்டார்.
பையோமெட் அறிவியல் கோட்பாட்டின்படி “வழுவற்ற முறை” ஆகும். ஆனால் நடைமுறையில் பல ஓட்டைகள் இருக்கின்றன.
“(ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகளைக் கொண்ட ஒருவர்) ஒரு முறை வாக்களித்த பின்னர், இன்னொரு அட்டையைக் கொண்டு வந்து இன்னொரு இடத்திற்குச் செல்லலாம். அங்கும் அவரது கைவிரல் ரேகை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அவர் அங்கு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார் என்று வாதிக்கப்படுகிறது.
“ஒருவருக்கு ஒரே ஒரு அடையாள அட்டை இருப்பதுதான் இந்த முறை செயல்படுவதற்கு முன்தேவையாகும்”, என்று அவர் கூறினார்.
இதை அழிக்க முடியாத மையுடன் ஒப்பிடுகையில், பையோமெட் முறை வாக்களிப்பு நடக்கும் நாளில் சரியாகச் செயல்படாமல் போகலாம். இதனால் சிக்கல்கள் உண்டாகும் என்று அசிஸ் மேலும் கூறினார்.
“ஐம்பது பேர்களை வைத்து சோதனை ஒன்றை நடத்தினோம். ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்ட சராசரி நேரம் 10 வினாடிகள்தான். ஆனால், அந்த இயந்திரம் சிலரின் கைவிரல் ரேகையை அடையாளம் காண முடியாமல் போய்விட்டதால் பிரச்னைகள் ஏற்பட்டன.
“அழிக்க முடியாத மையைப் பொறுத்தவரையில், விரலை அதில் தோய்த்தால் போதும்”, என்றாரவர்.
பையோமெட் முறை “அதிகமான செலவை” ஏற்படுத்துவதோடு அதை அமல்படுத்துவதற்கு குறைந்தது ஏழு மாத காலத்திற்கு முன்பே தயாராக வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அஹமட் வான் ஒமார் பொறுப்பற்றவர்கள் அந்த மையைப் பயன்படுத்தி ஏதும் அறியாதவர்களை வாக்களிக்க இயலாமல் செய்துவிட முடியும் என்று கூறியிருந்ததை அசிஸ் தவறு என்று கூறினார்.
2008 ஆம் ஆண்டில் அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தும் திட்டத்தை அழுத்தத்தின் காரணமாக தேர்தல் ஆணையம் கடைசி நேரத்தில் கைவிட்டது என்ற கூறிய அவர், வேறு தரப்பினர் வேறுவிதமான மையை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்துள்ளனர் என்ற கூறப்பட்டது என்றார்.
“இது சாத்தியமல்ல ஏனென்றால் அந்த மையின் நிறம் அந்த நாள் வரையில் தெரியாது…பலவிதமான நிறங்கள் இருக்கலாம். நாம் ஒரு விதமான முன்மாதிரியை வைத்துக்கொள்ளலாம்”, என்று அசிஸ் மேலும் கூறினார்.
மேலும், பல்வேறு இடங்களிலிருந்து மையைப் பெற முடியும் என்பதால், பற்றாக்குறை ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
அடுத்த தேர்தலில் பையோமெட், மை அல்லது இரண்டும்
இவற்றின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் எந்த முறையைப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆணையம் மறு ஆய்வு செய்து வருகிறது என்றாரவர்.
“அது அழிக்க முடியாத மையாக இருக்கலாம், பையோமெட் அல்லது இரண்டையும் கூட்டாக சேர்த்து தவறுகளுக்கு வழி இல்லாமல் செய்து விடலாம்…கடவுளின் கருணையுடன் அடுத்தத் தேர்தலில்”, என்றார் அசிஸ்.
இருப்பினும், சட்டத்துறை தலைவரின் அலுவலகம் இதன் சட்ட அடிப்படை குறித்து இன்னும் ஆய்வு செய்து வருகிறது என்றாரவர்.