அம்னோ ஆட்டுவிக்கிறது, அதற்கேற்ப நீதித்துறை ஆடுகிறது

“தன் எஜமானரின் சொல்படி ஆடும் ஊழல்மிக்க நீதித்துறைக்கு ‘’குற்றவாளி’ என்றோ ‘குற்றவாளி அல்ல’ என்றோ தீர்ப்புச் சொல்லும்படி உத்தரவிடுவது எளிய காரியம்தான். மலேசியர்களுக்கு இதுவெல்லாம் அத்துப்படி.”

 

அன்வார் தீர்ப்பு நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதைக் காண்பிக்கிறது:ரயிஸ்

ரூபன்: வழக்கம்போல் தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம் பிணாத்துகிறார். முதற்கண், அன்வார்மீது குற்றம்சாட்டி குற்றக்கூண்டில் நிறுத்தியது சரியா என்று ஒரு சாதாரண குடிமகனிடம் கேட்டுப்பாருங்கள்.

அவர்மீது குற்றம்சாட்ட முகாந்திரமே இல்லை என்றுதான் புத்திசாலிகள் பலரும் கூறுகிறார்கள். ஆனால் அரசும், நீதித்துறையும், போலீசும் தங்களிடமுள்ள அதிகாரம் மொத்தத்தையும் பயன்படுத்தி அவரைக் குற்றவாளியாக்க முனைந்தார்கள் என்றே தோன்றுகிறது.

நீதிபதிகூட வழக்கின்போது எத்தனைமுறை பாகுபாடாக நடந்துகொண்டார். இதையெல்லாம் கண்டு மக்கள் கொதித்துப்போனார்கள். மக்களின் கொதிப்பு சுவர்மேல் எழுத்தாக தெளிவாகவே தெரிந்தது. அரசாங்கமும் அளவுமீறிச் சென்றுவிட்டதை உணர்ந்தது. அப்படியிருக்க, தீர்ப்பை எண்ணி உங்களை நீங்களே பாராட்டிக் கொள்கிறீர்களே, வெட்கமாக இல்லை.

விஜய்47: நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவது உண்மையானால், வழக்கு இந்த அளவுக்குச் சென்றிருக்கக் கூடாது. என்றோ, தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும்.

தொடக்கத்திலிருந்தே, அரசுத்தரப்பு, நீதிக்கும் நேர்மைக்கும் புறம்பாகவே நடந்து வந்துள்ளது. அவற்றை இங்கு எடுத்துரைப்பது நேரத்தை வீணடிக்கும் செயலாக இருக்கும்.

இருந்தாலும் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.பல்கலைக்கழகப் படிப்பைப் பாதியில் கைவிட்டவருக்குப் பிரதமரே மதியுரை கூறுகிறார்,முகம்மட் சைபுல் புகாரி அஸ்லான் புகார் செய்வதற்குமுன் போலீசுடன் கொன்கோர்ட் ஹாட்டலில் தேநீர் அருந்துகிறார். இதெல்லாம் என்ன?

ஒரு தீர்ப்பை வைத்து நீதித்துறை மாறிவிட்டது என்று சொல்ல முடியாது. இந்த வழக்கைப் பொருத்தவரை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.சாட்சியங்கள் அந்த அளவுக்குத் தெளிவாக இருந்தன.

பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவில் ஆட்சி அமைத்ததும் பலர் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்களில்  நீங்களும் ஒருவராக இருப்பீர்கள், ரயிஸ் அவர்களே.

வெறுப்படைந்த மலேசியன்: நீதித்துறை சுதந்திரமாக செயல்படுகிறா?…வாயைக் கழுவுங்கள். இதெல்லாம் அம்னோ ஆடும் ஆட்டத்தின் ஒரு பகுதி.

தன் எஜமானரின் சொல்படி ஆடும் ஊழல்மிக்க நீதித்துறைக்கு ‘’குற்றவாளி’ என்றோ “குற்றவாளி அல்ல” என்றோ தீர்ப்புச் சொல்லும்படி உத்தரவிடுவது எளிய காரியம்தான். மலேசியர்களுக்கு இதுவெல்லாம் அத்துப்படி.

கர்மா: ஒரு காலத்தில் நிர்வாகம், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதாகக் குறைகூறி முனைவர் பட்டத்துக்கு ஆய்வுக்கட்டுரை எழுதிய ரயிஸா இப்படிக் கூறுவது? ரயிஸ், நீங்கள் ஒரு வழக்குரைஞர், என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?

பீரங்கி: நீதித்துறை சுதந்திரமாக செயல்படுகிறா…..? ஊழல் குற்றம் புரிந்த முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் கீர் தோயோவுக்கு 12 மாதச் சிறை. ஜோகூரில் ஷாம்பு திருடிய திருடனுக்கு 24 மாதச் சிறை, திரெங்கானுவில் ரிம20 திருடியவருக்குத் தண்டனை 36 மாதம்.

நல்லவன்: சுதந்திர நீதித்துறை? சிரிப்பு வருகிறது. மக்கள் நம்பவில்லை என்று தெரிந்ததும் குற்றச்சாட்டைக் கைவிட முடிவு செய்துவிட்டார்கள்.

தவறினால் தேர்தலில் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். 

49பாய்பம்: நமக்கு ஒரு தகவல் அமைச்சர் இருக்கிறார். மக்களுக்குத் தவறான தகவல்கள் தருவதே அவரது தலையாய பணி.அவருடைய இந்த அறிக்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. தாம் சொல்வதை மக்கள் இன்னமும் நம்புவார்கள் என்று நினைக்கிறார் பாருங்கள், அதுதான் கொடுமை.

கேஎஸ்என்:ரயிஸ், சட்டத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர் பேசும் பேச்சா இது? சாலே அப்பாசும் கே.தாஸும் எழுதிய ‘Mayday for Justice’ படித்திருக்கிறீர்களா? பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால்தான் நீதித்துறைக்குச் சுதந்திரம்.

TAGS: