நசாருதின்: ஹசான் நீக்கம் கடுமையானது

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசானுக்கு பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நசருதின் மாட் ஈசா ஆதரவு தெரிவித்துள்ளார். ஹசானை கட்சியிலிருந்து நீக்கியது மிகவும் கடுமையானது என அவர் வருணித்தார்.

இஸ்லாத்தின் முக்கியத்துவதை நிலை நிறுத்தும் ஹசானுக்கு ஆதரவளிக்க ஹசான் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்துக்குத் தாம் சென்றதாக அந்த பாச்சோக் எம்பி சொன்னதாக சினார் ஹரியான் நாளேடும் எம்ஸ்டார் இணைய ஏடும் கூறின.

“தனிநபர் என்னும் முறையில் ஹசானுக்கு ஆதரவளிக்க அனுதாபத்தின் பேரில் அங்கு சென்றேன். அவர் பல சவால்களை எதிர்நோக்கிய போதிலும் சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க அவர் கொண்டுள்ள ஈடுபாட்டை நான் அறிந்து கொண்டேன்.”

“ஹசானை விளக்ககம் தருவதற்கு வாய்ப்பளிக்காமல் அவரை நீக்குவதற்கு பாஸ் தலைமைத்துவம் எடுத்த முடிவு கடுமையானது”, எனக் கூறிய அவர், கட்சியின் முடிவெடுக்கும் உச்ச அமைப்பான syura மன்றத்துக்கு ஹசான் 30 நாட்களுக்குள் முறையீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் அன்வாருக்கு ஆதரவு அளிக்கத் தாம் மறுத்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஹசான் குற்றம் சாட்டியுள்ளார்.

அதே வேளையில் ஹசான் வீட்டில் கூடிய எல்லா பாஸ் தலைவர்களும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

ஹசானை ஆதரிக்கும் நசாருதினுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

ஹசானுக்குப் பதில் பொறுப்பேற்க அப்துல் ரானி தயாராக இல்லை

சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினராக ஹசானுக்குப் பதில் பொறுப்பேற்க தாம் விரும்பவில்லை என சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மான் அறிவித்துள்ளார்.

“அந்தப் பதவிக்கு வேறு யாராவது நியமிக்கப்பட்டால் நல்லது. மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் என்னும் முறையில் பொறுப்புக்களை என்னால் நிறைவேற்ற முடியாது என நான் அஞ்சுகிறேன்.”

என்றாலும் தாம் உட்பட அந்த பதவிக்கு நியமிக்கப்படும் எந்தத் தலைவரையும் மாநில தொடர்புக் குழு ஆதரிக்கும் என அவர் உறுதி அளித்தார்.

ஹசான் “கனவானை” போன்று பதவி துறக்க வேண்டும் என்றும் பாஸ் தலைமைத்துவம் அவருக்கு அடுத்து பொறுப்பேற்பவரை முடிவு செய்யும் என்றும் சிலாங்கூர் மாந்திரி புசார் காலித் இப்ராஹிம் நேற்று கேட்டுக் கொண்டார்.

வரும் வெள்ளிக்கிழமை சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா, தமக்குப் பேட்டி அளிக்கும் போது ஹசானுக்குப் பதில் நியமிக்கப்படுகின்றவர் பற்றி விவாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

TAGS: