பினாங்கில் தைப்பூச ஏற்பாடுகளில் தாமதம்

தைப்பூசத்துக்கு இன்னும்  சில வாரங்களே உள்ள வேளையில், பினாங்கு இந்து அறவாரியம் (HEP) வழக்கமாக தண்ணீர் பந்தல்கள் அமைக்கும் சுமார் 300 அமைப்புகளுடன் ஒரு சந்திப்பைக்கூட நடத்தாமல் இருக்கிறது.

தைப்பூச விழாவில் திருமுருகன் தரிசனத்துக்காக வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்காக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும்  தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், பழச்சாறு, காப்பி, தேநீர் உள்பட அன்னதானமும் வழங்குவார்கள். இவ்வாண்டு தைப்பூசம் பிப்ரவரி 7-இல் கொண்டாடப்படுகிறது.

தண்ணீர் பந்தல் வைத்து நடத்துவோரில் ஒருவரான தர்ஷனா ராயர், பந்தல் போடுவோருடன் எச்இபி, டிசம்பர் மாதத்திலேயே கூட்டம் நடத்திப் பல்வேறு விவகாரங்கள் பற்றியும் விவாதிப்பது வழக்கம் என்றார்.

“ஆனால், இது ஜனவரி. எச்இபி இதுவரையிலும் பொதுமக்களுக்கோ, பந்தல் போடுவோருக்கோ அறிக்கை எதுவும் வெளியிடாதிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது”, என்று மலேசியாகினிக்கு அனுப்பிவைத்த அறிக்கை ஒன்றில் அவர் கூறியிருந்தார்.

“எச்இபி இதுபோன்ற சமய விழாவில் இந்திய சமூகத்துக்கு நேர்மையாக சேவையாற்ற வேண்டும். இது சம்பந்தமான கூட்டத்துக்குத் தவறாமல் ஏற்பாடு செய்ய வேண்டும்.

“அது மெளனமாக இருப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை, பட்டர்வொர்தில் நிலத்தை தனியாருக்குக் குத்தகை விட்டது ஒரு விவகாரமாக மாறியதால் இப்படி இருக்கிறா?”, என்றவர் வினவினார்.

இம்மாதத் தொடக்கத்தில், இந்து பக்தர்கள் சுமார் 30 பேர், ஸ்ரீகங்காதரன் சிவபெருமான் கோயிலில், கோயில் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எச்இபி, அது தனக்குச் சொந்தமான நிலம் என்றும் நிலத்தைக் குத்தகை விடுவது பற்றி ஆலய நிர்வாகத்துக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்தது.

ஆனால், ராயர், பொதுவில் டெண்டர் அழைக்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் நிலம் குத்தகைக்கு விடப்பட்டதா என்பதை வாரியம் தெளிவுபடுத்தவில்லை என்றார்.

“எச்இபி அதன் பெயரைக் காப்பாற்ற சம்பந்தப்பட்ட தரப்புகளைச் சந்தித்துப் பேச வேண்டும்.”

அத்துடன், வாரியத்தில் ஆணையர்கள் நியமனம்,அவர்களுக்கும் நிர்வாகப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் ஊதியம் முதலியவை பற்றியும் எச்இப் விவரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

TAGS: