பெர்க்காசா உறுப்பினர்கள், பினாங்கில் மாநில அரசாங்கம் வீடுகளை உடைப்பதாகவும் மலாய் சமூகத்தின் வியாபாரங்களை கெடுப்பதாகவும் தாங்கள் கூறிக் கொள்வதை புலப்படுத்தும் வகையில் புல்டோசர் மாதிரி ஒன்றை முதலமைச்சர் லிம் குவான் எங் அலுவலகத்துக்கு அனுப்பினர்.
அந்த மாதிரியை கொம்தார் கட்டிடத்தின் மூன்றாவது அடுக்கில் உள்ள மாநில அரசாங்க அலுவலகங்களுக்கு பினாங்கு பெர்க்காசா இளைஞர் பிரிவு தலைவர் முகமட் ரிசுவான் அசுடின் தலைமையில் ஒரு குழு கொண்டு சென்றது.
ஜெலுத்தோங்கில் மோட்டார் சைக்கிள் கடை ஒன்று உடைக்கப்பட்டதை அவர்கள் ஆட்சேபித்தனர். அந்தக் கடை பெர்க்காசா உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானதாகும்.
ஆனால் அவர்கள் 28வது மாடியில் உள்ள லிம் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அந்த ‘பரிசுப் பொருளை’ ஏற்றுக் கொள்ள லிம் அலுவலகத்திலிருந்து எந்த அதிகாரியும் வரவில்லை.
ஏமாற்றமடைந்த அவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். சிஎம் அலுவலகக் கதவுகள் திறக்கப்படும் என அவர்கள் நம்பினர். ஆனால் அதற்குப் பதில் அந்தக் கதவுகளை காவலர் ஒருவர் பூட்டுப் போட்டு மூடி விட்டார்.
அதனைத் தொடர்ந்து லிம் மக்களைச் சந்திக்க விரும்பவில்லை என்றும் தங்களது பரிசுப் பொருளை ஏற்க அவர் அஞ்சுகிறார் என்றும் பெர்க்காசா குழுவினர் குறை கூறத் தொடங்கினர்.
“அது ஒரு மாதிரி தான். அவர் ஏன் அஞ்சுகிறார்?” என ரிசுவான் வினவினார். அடுத்து அவர் சிவப்புத் துணியை அகற்றி அந்த புல்டோசர் மாதிரியை நிருபர்களுக்குக் காட்டினார்.