மலாக்கா கீத்தா கிளை கலைக்கப்பட்டது; உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர்

கீத்தா (Kesejahteraan Insan Tanah Air) கட்சியின் மலாக்கா கிளையைச் சேர்ந்த 60 உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அந்தக் கிளை கலைக்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை அந்தக் கிளைக்கு இது நாள் வரை தலைவராக இருந்த கர்னல் (ஒய்வு பெற்ற) ஹஷிம் பூத்தே வெளியிட்டார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 12ம் தேதி அமைக்கப்பட்ட அந்தக் கிளையின் உறுப்பினர்கள் கட்சித் தலைவர் ஜைட் இப்ராஹிம் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக அவர் சொன்னார். காரணம் ஜைட் தமது போராட்டத்தில் அடிக்கடி முரண்படுவதாக அவர் தெரிவித்தார்.

“கீழ் நிலை உறுப்பினர்கள் அவரது போராட்டத்தின் மீது குழப்பம் அடைந்துள்ளனர். சில சமயங்களில் அவர் அம்னோவையும் பிஎன்-னையும் ஆதரிக்கிறார். மற்ற நேரங்களில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார். அவர் உண்மையில் தமக்காக அரசியல் ஆட்டம் ஆடுவதாக நாங்கள் கருதுகிறோம்”, என ஹஷிம் இன்று மலாக்காவில் நிருபர்களிடம் கூறினார்.

கீத்தா கட்சியின் தலைமைத்துவத்திடம் கட்சியின் போராட்டத்துக்கு அடித்தளமாகத் திகழும் மக்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எந்தச் செயல் திட்டமும் கிடையாது என்றார் அவர்.

முன்னாள் கீத்தா உறுப்பினர்களுடைய விண்ணப்ப பாரங்களை ஹஷிம் தாங்கா பத்து பிகேஆர் தொகுதித் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் -னிடம் ஒப்படைத்தார்.

TAGS: