வரும் பொதுத் தேர்தல் “இது வரை இல்லாத அளவுக்கு மிகவும் கறை படிந்ததாக” இருக்கும்

“அதிகாரத்தில் நிலைத்திருக்க ஊழலான அம்னோ தலைவர்களும் ஆதரவாளர்களும் எதனையும் செய்வார்கள் என்பதால் வரும் 13-வது பொதுத் தேர்தல் இது வரை இல்லாத அளவுக்குக் ‘கறை படிந்ததாக’ இருக்கும்.”

இவ்வாறு மலேசியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜான் ஆர் மாலோட் ஆரூடம் கூறியிருக்கிறார்.

அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கு II-லிருந்து விடுதலை அடைந்திருப்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அரசியல் ரீதியில் செல்வாக்கை அதிகரித்துள்ள போதிலும் அவரது நிர்வாகம் பரவலாக ஊழல் மலிந்ததாகவே கருதப்படுகின்றது என அவர் வால் ஸ்டீரிட் சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“ஊழல் அதிகரித்து வருவதை பொது மக்கள் கண்கூடாகக் காண்கின்றனர். அரசாங்கக் குத்தகைகள் மூலம் பணம் பண்ணுவதை வழக்கமான வியாபாரம் என்று அம்னோ ஆதரவாளர்கள் கருதுவதாகவும் மக்கள் எண்ணுகின்றனர்.”

“பல மலேசியர்கள் இப்போது ஆளும் வர்க்கத்தை வருணிப்பதற்கு  ‘kleptocracy’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்,” என 1995ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய மாலோட் சொன்னார்.

ஊழல் நடைமுறைகளை ஒடுக்குவதற்கு எந்த ஒரு அம்னோ தலைவரும் விரும்பவில்லை என்றும் பொது மக்கள் கருதத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவனம் சம்பந்தப்பட்ட அண்மைய ஊழலில் அது தெளிவாகத் தெரிந்தது.

“அத்துடன் அந்த ஊழல் தொடர்பாக நஜிப் மௌனம் சாதிப்பதும் அந்த எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.

மகாதீர் பாணியிலான உபாயங்கள் மீண்டும் வரக் கூடும்

அதிகாரத்தை இழக்கக் கூடும் என்னும் அச்சம் அம்னோவை வாட்டுகிறது. அது போராடாமல் அது விலகாது.  அரசாங்கக் கருவூலத்திற்கான தங்களது பாதை அடைக்கப்பட்டு விடும் நிர்வாகத்திலும் ஊடகங்களிலும் வர்த்தகத்திலும் உள்ள அம்னோ ஆதரவாளர்கள் அஞ்சுவதே அதற்குக் காரணம்.

“நிறைய பணயம் வைக்கப்பட்டுள்ளதாக் ஊழல் மூலம் நன்மை அடைகின்றவர்கள் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.”

“மகாதீர் பாணியிலான இரும்புக் கர உபாயங்கள் மீண்டும் தலை தூக்குவதை நிராகரிக்க முடியாது,” என மாலோட் எச்சரித்தார்.

ஆகவே “வரும் பொதுத் தேர்தல் மலேசிய வரலாற்றில் மிக முக்கியமானதாகவும் திகழும். மிகவும் கறை படிந்ததாகவும் இருக்கும்.”

அதனைக் கருத்தில் கொண்டு அனைத்துலக சமூகம் அரசியல், தேர்தல் சீர்திருத்தங்களுக்கு தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நஜிப்-புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மாலோட் விரும்புகிறார். அரசியல் அத்துமீறல், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக நாடு நடத்தும் போராட்டத்தில் அன்வார் விடுதலை ஒரு தொடக்கமே என்றும் அவர் சொன்னார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு வழங்கிய யோசனைகள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“தேர்தல் சீர்திருத்தங்கள் மீது அம்னோ மழுப்பினால் புதிதாக கிடைத்துள்ள நல்லெண்ணம் பாழாகி விடும். அப்போது பக்காத்தான் ராக்யாட் மேலும் வலுப் பெறும்.”

TAGS: