கருவூலத்துக்கான பாதை அடைக்கப்பட்டால் மட்டுமே சீர்திருத்தம் தொடங்கும்

“அம்னோவில் பரவியுள்ள புரவலர் முறை அந்தக் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது. அது புதுப்பிக்கப்படுவதற்கான சாத்தியமே இல்லை.”

கோர்பாஷேவ்-வை பின்பற்றுங்கள் என நஜிப்புக்கு அறிவுரை

பேஸ்: நஜிப் அளவுக்கு அதிகமாக அழுக்கை சுமந்து கொண்டிருப்பதால் சீர்திருத்தங்களை உதட்டளவில் மட்டுமே வலியுறுத்த முடியும். அவரால் சீர்திருத்தங்களை தொடங்க முடியாது. அம்னோ ஜமீன்களுக்கும் அது தெரியும்.

அம்னோ ஒர் முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதே பிரச்னையாகும். அது நஜிப் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. புரவலர் முறை வெகு காலத்துக்கு முன்பே அந்தக் கட்சியில் வேரூன்றி விட்டது.

அது அந்தக் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது. அது புதுப்பிக்கப்படுவதற்கான சாத்தியமே இல்லை.

கூட்டரசு நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் தோல்வி கண்டால் மட்டுமே அம்னோ தன்னைத் திருத்திக் கொள்வதற்கு வழி ஏற்படும். அப்போது கருவூலத்துக்கான பாதை முற்றாக அடைக்கப்படும். அம்னோவிலும் தேர்தலிலும் தாங்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஜமீன்களுக்கு நிதியும் கிடைக்காது.

அந்த சூழ்நிலையில் நீண்ட காலமாக மறக்கப்பட்டு விட்ட சாதாரண உறுப்பினர்கள் துணிச்சல் பெற்று சம நிலையில் ஜமீன்களை எதிர்த்துப் போராடுவர்.

அவர்கள் தவறுகளைத் திருத்தி ஊராட்சி மன்ற, மாநில, கூட்டரசு நிலைகளில் பக்காத்தான் ராக்யாட்டுக்குப் போட்டியாக அம்னோவை மீண்டும் வலுப்படுத்த முடியும்.

கலா: முன்னாள் அமைச்சர் அப்துல் காதிர் ஷேக் பாட்சிர், முன்னாள் சோவியத் யூனியன் தலைமைச் செயலாளர் கோர்பாஷேவ் -வை பின்பற்றுமாறு நஜிப்-புக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது சரியான அறிவுரையாகும்.

என்னைப் பொறுத்த வரையில் நஜிப் தமது இலட்சியத்தை (உண்மையில் அவருக்கு அதில் நாட்டம் இருந்தால்) அடைவதற்கு இரண்டு விஷயங்கள் அவருக்கு சோதனையாக இருக்கின்றன. முதலாவதாக அமைப்புக்களை மாற்றம் செய்வதற்குக் காலம் பிடிக்கும். மாற்றத்தில் தாம் உறுதியாக இருப்பதை அவர் காட்டியதும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எளிதாக இருக்கும்.

ஆகவே படிப்படியான மாற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர் முதலில் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலை நீக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும். அரசாங்கக் கொள்முதல்கள் மீது வெளிப்படையாக இருக்க வேண்டும். அமலாக்க அமைப்புக்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது அம்சம் காயத்தை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் அது தான் உண்மை நிலை. அது பண்பாடு சம்பந்தப்பட்டது.

கோர்பாஷேவ் இயற்கை தன் பாதையில் செல்வதற்கு அனுமதித்தார். (சோவியத் காலனிகள் பிரிந்து செல்லவும் சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றவும்)ஆனால் இங்கு நஜிப், அவரை விட மும்மடங்கு கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும்.

இங்கு உள்ள பெரிய விஷயம் இது தான்: ஜனநாயகத்துக்கு பொருத்தமானதாக அவர் இஸ்லாத்தை மாற்ற முடியுமா ? பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அவர் ஜனநாயகத்தைத் தூண்டி விட முடியுமா ?

அடையாளம் இல்லாதாவன்: காதிர், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் அந்த சீர்திருத்தங்களை அமலாக்குவதற்குப் போதுமான துணிச்சல் நஜிப்பிடம் உள்ளதா ?

சோலாரிஸ்: காதிர் அவர்களே, அரசாங்க ஊழலையும் நண்பர்களுக்கு உதவும் போக்கையும் கசிவுகளையும் நன்கு அறிந்துள்ள மூன்று மில்லியன் அம்னோ உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர்கள் “தீவிர மாற்றங்களை” விரும்புகின்றனர் என்றும் நீங்கள் சொல்கின்றீர்கள்.

ஊழலும் நண்பர்களுக்கு உதவும் போக்கும் கசிவுகளும் நிறைந்துள்ள கருவூலத்துக்கான பாதையைத் தவற விட்டு விட்டதால் மகிழ்ச்சியாக இல்லாத உறுப்பினர்களே  “தீவிர மாற்றங்களை” விரும்புகின்றனர் என்று சொன்னால் அது கிட்டத்தட்ட உண்மையாக இருக்கும்.

1எம்: நான் காதிர் சொல்லிய கருத்துக்களைப் பாராட்டுகிறேன். அவர் பிரதமருடைய அமைச்சரவைப் பட்டியலில் இருக்கும் போது அதனைச் சொல்லியிருந்தால் இன்னும் வலுவாக இருந்திருக்கும். ஆனால் அந்த சமயத்தில் சூழ்நிலை சரியாக இல்லை என்று தான் நான் கருதுகிறேன்.

நஜிப் குணத்தை வைத்துப் பார்க்கும் போது அவருக்கு கோர்பாஷேவ்-வைப் போன்று அரசியல் துணிச்சல் இருக்குமா என்பது தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இருவரும் வெவ்வேறு வகையான வட்டத்தைச் சார்ந்தவர்கள். அதனால் அரசாங்க மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே உண்மையான சீர்திருத்தம் வரும்.

பிஎன் -னைக் காட்டிலும் நாட்டை நிர்வாகம் செய்வதில் பக்காத்தானுக்கு அதிகத் திறமை இல்லாமல் போகலாம். என்றாலும் இந்த நாட்டின் உண்மையான எஜமானர்கள் மக்கள் என்பதை பக்காத்தானும் பிஎன் -னும் உணர்ந்திருக்கும்.

ஸ்விபெண்டர்: அம்னோ ஜமீன்களுக்கும் வலச்சாரிகளுக்கும் எதிராக போராடும் துணிச்சல் நஜிப்புக்கு கிடையாது.  அப்துல்லா அகமட் படாவையைப் போன்று அவரும் மதில் மேல் பூனை தான்.

நஜிப்பும் அப்துல்லாவும் யார் என்ன சொன்னாலும் செவி சாய்த்தார்கள். ‘பாதுகாப்பாக இயங்குவதையே’ விரும்பினர். அதுவே அவர்களுடைய பலவீனமாகும்.

சரவாக்கியன்_3ff9: உண்மை கசக்கவே செய்யும். ஆனால் நஜிப் காதிர் சொல்வதற்கு செவி சாய்க்க வேண்டும். ஏனெனில் காதிர் சொல்வதே உண்மை நிலை.

TAGS: