இந்தியர்களின் பங்குகளை கூட்டரசு அரசாங்கம் வாங்கலாமே, சார்ல்ஸ்

மலேசியாவில் உள்ள பல இந்தியர்கள் பண தட்டுப்பட்டாலும் வறுமையாலும் வாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது பிரதமர்துறை துணை அமைச்சர் எஸ்.கே.தேவமணி கூறியிருப்பதிலிருந்து தெளிவாகக் தெரிகின்றது. இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அமானா சஹாம் 1  மலேசியா பங்குகளில், 69 கோடியே 59 லட்சம் பங்குகள் இன்னும் விற்கப் படாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமானா சஹாம் 1 மலேசியா பங்குகளை வாங்குவது மிக சிறந்த முதலீடு என அனைவரும் முக்கியமாக மலேசிய இந்தியர்கள் அறிந்திருந்தும் ஏன் முதாலீடுகளை வாங்காமல் இருக்கின்றனர் என்பதனை அரசாங்கம் முதலில் ஆராய வேண்டும். 

ஏறிக் கொண்டே வரும் விலை வாசிகளை சமாளிக்கவே முடியாத நிலையில் பல குடும்பங்கள், வரவு எட்டாய் இருந்தால் செலவு பத்தாய் இருக்கும் குடும்பங்கள், வருவாயே இல்லா நிலையில் பல பண சுமைகளை சுமந்து கடன்களை வாங்கி சமாளிக்கும் சூழ்நிலையில்  சிக்கித் தவிக்கும்  குடும்பங்களால் எப்படி முதலீடு செய்ய முடியும்? அவர்களுக்கு எப்படி இந்த முதலீட்டு வழி உதவி செய்வது என்பதை அரசாங்கம் உத்தேசித்துள்ளதா என வினவினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

மலேசியாவில் பொருள்களின் விலை வாசி ஏறிக் கொண்டே போகும் அதேவேளையில் சம்பளம் மட்டும் ஏறாமல் தேக்க நிலையிலே இருப்பதால் மிஞ்சி இருக்கும் பங்குகளை இந்தியர்கள் வாங்கி பலனை அனுபவிப்பது இக்காலக் கட்டத்திற்கு சாத்தியமில்லா ஒன்று என விளக்கிய சார்ல்ஸ் இதில் அரசாங்கம்தான் இந்திய சமூகத்திற்கு உதவ முன் வர வேண்டும் என கூறினார்,
 

இந்த பங்குகளை கூட்டரசு அரசாங்கமே வாங்கி அதன் லாபங்களை இந்தியர்களின் நலனுக்காக பயன்படுத்தலாமே என கூறினார். இந்த லாபங்களை வைத்து ஏழ்மையில் உள்ள இந்தியர்களுக்கு, தமிழ்ப்பள்ளிகளின் நிதி, கல்வி நிதி, கல்வி கடனுதவி, வேலை வாய்ப்பு, தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் என பலருக்கு அல்லது பல துறைகளில் பல வழிகளில் இந்தியர்களுக்கு உதவ முடியுமே என்று அவர் மேலும் கூறினார்.

மக்களின் நலனை காப்பதாகக் கூவிக் கொண்டிருக்கும் அரசாங்கம் முதலில் இந்தியர்களின் பொருளாதார நிலையை அறிந்து  இந்தியர்களுக்கு உதவுவதற்கான யுக்திகளை ஆராய்ந்து செயல்படத் தொடங்க வேண்டும். அதுவும், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே தொடங்கியாக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

TAGS: