இராமசாமி – டிஏபி அரசியல் ரீதியாக எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அது அரசாங்கத்தில் தொடர வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இல்லையெனில், மத மற்றும் இன அடிப்படையிலான கடுமையான (பாதுகாப்பு மனப்பான்மை கொண்ட) சக்திகள் அரசை ஆட்சி செய்யத் தொடங்கும் என்பதே அவர்களின் வாதம்.
பிரதமர் அன்வார் இப்ராஹீம் தலைமையிலான அரசில், 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை டிஏபி கொண்டிருந்தாலும், டிஏபி அரசியல் ரீதியாக பலவீனமாகவே காணப்படுகிறது.
40 எம்.பிக்களும், ஐந்து அமைச்சர்களும் இருந்தபோதும், டிஏபி பயன்படுத்தும் அதிகாரம் அதன் எண்ணிக்கைக்கு ஒப்பாக இல்லை.
விசித்திரமான விஷயம் என்னவென்றால், அரசில் 40 எம்.பிக்களின் ஆதரவு இருந்தபோதிலும், கூட்டணி அரசில் டிஏபியே மிகவும் பலவீனமான கட்சியாக உள்ளது.
20-க்கும் மேற்பட்ட எம்.பிக்களை மட்டுமே கொண்ட அம்னோ, டிஏபியைவிட அதிக அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துகிறது.
இருப்பினும், சில ஆதரவாளர்களின் கருத்துப்படி, அரசில் டிஏபியின் நிலை பலவீனமாக இருந்தாலும், மலேசியாவை பல்லின பண்பாட்டுச் சமூகமாகப் பாதுகாக்க அதன் இருப்பு அவசியம்.
டிஏபி அரசிலிருந்து வெளியேறினால்,அந்த அரசியல் வெற்றிடத்தை பிஎன் (PN) நிரப்புமானால் தற்போதைய நிலையைவிட சூழ்நிலை மேலும் மோசமாகும்.
டிஏபி அரசை அதிரவைக்காமல் இருக்கலாம்; ஆனால் குறைந்தபட்ச பல்லினத்தன்மையையாவது பாதுகாக்க அதன் இருப்பு தேவைப்படுகின்றது என்றே வாதிடப்படுகிறது.
அரசாங்கத்தில் டிஏபி இருப்பதற்கும், இல்லாதற்கும் வித்தியாசம் உண்டு என்பதும் கூறப்படுகிறது.
ஆனால், டிஏபியின் பிரபலத்தன்மை குறைந்து வரும் நிலையில் கூட, அது அரசில் தொடர வேண்டும் என்ற பாதுகாப்பு வாதம் நியாயமாகத் தோன்றவில்லை.
கேள்வி என்னவென்றால்: டிஏபி எவ்வளவு காலம் அரசில் தொடர முடியும்? இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது டிஏபி தனது தற்போதைய தேர்தல் வலிமையைத் தக்கவைக்க முடியுமா என்பது சந்தேகமே.
40 நாடாளுமன்ற இடங்களை வென்றது, முந்தைய அரசியல் சூழ்நிலைகளில் டிஏபி எட்டிய உச்ச வெற்றியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த தேர்தல் சாதனையை மீண்டும் டிஏபி பெற முடியுமா என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது.
டிஏபி ஏன் அரசாங்கத்தில் தொடர வேண்டும் என்ற கேள்வியில், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் என்ற அம்சம் கணக்கில் கொள்ளப்படவில்லை.
தற்போதைய பிஎச் (PH) கூட்டணி அரசுக்கு டிஏபியின் தேர்தல் வலிமை பயனுள்ளதாக இருக்கும் வரை மட்டுமே, டிஏபி அரசில் தொடர முடியும்.
சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியாவிட்டால், டிஏபி எளிதாக கைவிடப்படும் அபாயம் உள்ளது. 2022 பொதுத் தேர்தலில்தான் சீனர்கள் மற்றும் இந்தியர்களிடமிருந்து டிஏபி அதிகபட்ச ஆதரவைப் பெற்றது.
2023 மாநிலத் தேர்தல்களில், இந்தியர்களின் ஆதரவு 43 சதவீதமாகக் குறைந்தது.இன்றைய நிலையில், டிஏபியின் செயலற்ற தன்மையால், பொதுவாக மலாய் அல்லாத சமூகங்களின் ஆதரவு குறைந்துவிட்டது.
சீனர்களிடையே, பாஸ் (PAS) குறித்த அச்சமே அவர்களை இன்னும் டிஏபியின் பக்கம் வைத்திருக்கிறது.
சமீபத்திய சபா தேர்தலில், டிஏபி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்து, போட்டியிட்ட அனைத்து இடங்களையும் இழந்தது.
சபா தேர்தல் குறித்த சமீபத்திய ஆய்வுகள், டிஏபியின் தோல்விக்கு உள்ளூர் பிரச்சினைகளைவிட தேசிய அரசியல் விவகாரங்களே முக்கிய காரணமாக இருந்தன என்பதை காட்டுகின்றன.
சீன வாக்காளர்கள் தீபகற்ப மலேசியாவிலும் இதேபோல் நடந்து கொள்வார்கள் என்ற உறுதி இல்லை; என்றாலும், அவர்களுக்கான மாற்றுக் கட்சி இன்னும் உருவாகவில்லை. பாஸின் அச்சம் சீனர்களை எப்போதும் டிஏபியுடன் வைத்திருக்கும் என்று நினைத்தால், டிஏபி தலைவர்கள் மிகப்பெரிய தவறு செய்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்திய வாக்காளர்கள், பாஸை மற்றவர்கள் போல அஞ்சாததால், ஏற்கனவே டிஏபியை விட்டு விலகியுள்ளனர்.டிஏபி தலைவர்களுக்கு சிறிதளவு மரியாதையும் சுயமரியாதையும் இருந்தால், அவர்கள் ஏன் தற்போதைய அரசில் தொடர வேண்டும்?
உண்மையில், வலதுசாரி தீவிரவாதத்துக்கு மெதுவாக நகரும் இந்த அரசில் டிஏபி தொடர்ந்து இருப்பதன் மூலம், பல்லினத்தன்மையை பாதுகாக்க எந்த நம்பகமான பங்களிப்பையும் அது செய்யவில்லை.
எந்தக் கட்சியும் நிரந்தரமாக அரசாங்கத்தில் இருப்பதில்லை; டிஏபியும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
பல்லினத் தன்மையை பாதுகாப்பதற்கான சிறந்த வழி, அரசில் அதன் பரிதாபகரமான இருப்பு அல்ல; மாறாக, எதிர்ப்புகளை எதிர்கொண்டு வெளியேறி போராடுவதே என்று நான் நினைக்கிறேன்.
பல்லினத்தன்மையை காப்பாற்றுவதற்காக டிஏபி அரசில் தொடர வேண்டும் என்ற வாதம், வேகமாக மாறி வரும் நாட்டின் அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாத, வரலாற்று உணர்வற்ற பதிலாகும்.
டிஏபி அரசில் தொடர வேண்டும் என்று கேட்பது, அதன் பிரபலத்தன்மை அல்லது பிரபலமின்மை, மற்றும் அதற்கான மக்கள் ஆதரவு உள்ளதா என்ற கேள்விகளை முற்றிலும் புறக்கணிக்கிறது.
அரசில் மௌனமாக இருப்பதே பல்லினத்தன்மைக்கு மிகப் பெரிய ஆபத்து என்பதை டிஏபி தலைவர்கள் நன்றாகவே அறிவார்கள். தற்போதைய அரசியல் சூழலில், தாக்குதல்மிக்க நிலைப்பாடே கட்சி எடுக்க வேண்டிய சிறந்த யுத்தியாகும். அரசில் ‘ஆம்’ சொல்லும் கட்சியாக இருப்பது, அதன் கொள்கைகளை உயிருடன் வைத்திருக்கக்கூடிய மிக மோசமான வழியாகும்.
அதிகாரம், பதவிகள், சலுகைகள் என்பவற்றுக்காக மட்டுமே அரசில் தொடர்வது, டிஏபி கட்சி எதிர்கொள்ள வேண்டிய மிக வலியான, ஆனால் தவிர்க்க முடியாத தேர்வாகும்.
அதிகாரம், பதவி மற்றும் சலுகைகளுக்காக அரசாங்கத்தில் தொடர்வது மிகப் பெரிய துரோகமாகும்!
– இராமசாமி தலைவர், உரிமை

























